PM Modi Speech: தேசியத்தின் பக்கம் நிற்கும் தமிழகம்: பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!
PM Modi Speech: தொழில்துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
"தொழில்துறையில் முக்கிய பங்காற்றும் கொங்கு மண்"
அப்போது பேசிய பிரதமர், "உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது. தொழில்துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. மிகப்பெரிய அளவில் கூடியுள்ள மக்களுக்கு நன்றி. அரசியல் வளர்ச்சியில் புதிய மையமாக மாறியுள்ளது தமிழகம்.
இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேசமே பிரதானம் என கருதி பாஜக தொண்டர்கள் உழைக்க வேண்டும். என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மக்கள் அற்புதமான வரவேற்பு அளித்துள்ளார்கள் என்பதற்கு நீங்களே சாட்சி.
2024இல் தமிழகம் புதிய சரித்திரம் படைக்கும். தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கிறது என்பது இங்கு கூடியுள்ள மக்களின் மூலம் நிரூபணம். மண்ணும் கடவுளும் ஒன்று கருதி பாஜக உழைத்து வருகிறது. காசி தமிழ் சங்கம், செங்கோல் மூலம் தமிழுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறோம்" என்றார்.
"தமிழ்நாட்டை சுரண்டுவதற்காக INDIA கூட்டணி உருவாக்கம்"
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு எப்பொதும் இருக்கின்றது. பாஜகவின் வளர்ச்சியை பார்த்து மக்களை பிரித்து நாற்காலியை காப்பாற்றி கொள்ள பொய்களை சொல்லிகொண்டு இருக்கின்றனர் கொள்ளையர்கள். அவர்களின் கபடநாடகம் வெளியே வந்து விட்டது.
ஊழல்கள் வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னுரிமை அளித்து வருகிறது. மோடி அளித்த உத்தரவாதத்தின்படி தமிழக மக்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றரை கோடி மக்களுக்கு பாஜக அரசு இலவச அரிசி வழங்கி வருகிறது.
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை INDIA கூட்டணி கைப்பற்றினால் இங்கு வளர்ச்சி ஏற்படாது. தமிழ்நாட்டை சுரண்டுவதற்காக INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி, தோல்வியை ஒத்துக் கொண்டுவிட்டது.
INDIA கூட்டணியில் யாருமே வளர்ச்சியை பற்றி பேசவில்லை. கல்வியை பற்றி பேசவில்லை. தங்களின் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். மோடியின் உத்தரவாதம் என்பது பல ஆண்டு காலத்திற்கு தொடரும். தமிழ்நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் - திமுக கூட்டணி பாடுபடவில்லை" என்றார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பிறகு, ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தார்" என்றார்.