PM Modi TN Visit:'வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்; அந்த பயம் இருக்கட்டும்'- கரூர் எம்பி ஜோதிமணியின் ட்விட்
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பேசுப்பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,983 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 3,759 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 721பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டில் அதிகரிகத்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரும் கரூர் நாடாளுமன்ற எம்பியுமான ஜோதிமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம். வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம். தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு மறைமுகமாக பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரின் இந்தப்பதிவிற்கு பலரும் பதில் பதிவு செய்து விமர்சனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்தான சூழலில் எம்பி ஜோதிமணியின் பதிவு பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க:யாராக இருந்தாலும் அரசு பாய்ந்து பிடிக்கும் - ராஜேந்திர பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்ட முதல்வர்
வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம்.வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்.தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்!
— Jothimani (@jothims) January 7, 2022
முன்னதாக மதுரையில் ஜனவரி 12ஆஅம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரையில் பிரதமர் பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா, ஒமிக்ரான் அதிகரிப்பு காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த விழா ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்தச் சூழலில் கரூர் எம்பி ஜோதிமணி தன்னுடைய ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவு இதை மறைமுகமாக குறிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா - குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸை இழுத்து மூடிய மாவட்ட நிர்வாகம்