தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் சென்னை விமான நிலைய புதிய முனையம்...! நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி இன்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வந்தார்.
ஒருநாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை நாட்டிற்கு அர்பணித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடி:
முன்னதாக, பிரதமர் மோடி இன்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வந்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.
இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சென்னை விமான நிலையத்தில், மேலும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ளது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு, 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முனையத்தின் கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில், சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக, பயணியருக்கான, வழக்கான நடைமுறைகள் கையாளப்படும். இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் ஐந்து தளங்களுடன் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்:
தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை, ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே பொருளாதார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது.
அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நாட்டின் முக்கிய வெளிநாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த புதிய முனையம் சென்னையின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த புதிய முனையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினரின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தரப்பில் வெளியான தகவலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.