சேலம் மாநகரில் இந்த இடத்தில் பட்டாசு வெடிக்க வேண்டாம்... கோரிக்கை வைத்த மாமன்ற உறுப்பினர்.
சேலம் மாநகரில் அமைந்துள்ள அய்யாசாமி பூங்காவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் உள்ளதால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதி 34வது கோட்டத்திற்கு உட்பட்ட அய்யாசாமி பசுமை பூங்காவில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அப்பகுதி மக்களை வவ்வாலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட வேண்டும் என்று சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உள்ளிட்டோ தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, அய்யாசாமி பசுமை பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வவ்வாலின் நன்மை குறித்தும், அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வவ்வால்கள் பெரும் பங்கு வகித்து வருவதாகவும் எடுத்துக் கூறினார். அதன் பின்னர் அய்யாசாமி பசுமை பூங்காவின் அருகில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வவ்வாலை பாதுகாக்க அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் 34 வது கோட்டத்திற்கு உட்பட்ட 5000 குடும்பங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வவ்வாலின் நன்மை குறித்தும், சுற்றுச்சூழலுக்கு வவ்வால் செய்யும் நன்மை குறித்தும் குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேசிய மாமன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஈசன் இளங்கோ, "சேலம் மாநகர பகுதியில் இருக்கக்கூடிய மிகவும் பழமையான பூங்காவாக அய்யாசாமி பசுமை பூங்கா அமைந்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய மிக வயதான மரங்கள் அந்த மரங்களிலே வசிக்கக்கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது.
அந்த வவ்வால்களை காப்பாற்றுவதற்காக இன்று பகுதி மக்களிடம் அதிக ஒளி எழுப்பக்கூடிய வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளேன். அந்த வெடி அதிர்வுகள் அதன் மூலம் வரும் புகைகள் வவ்வால் இனத்தை அழித்துவிடும். அவை இடம் பெயர்ந்து போய்விடும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டேன். பின்னர் வவ்வால் இருப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுரங்களை பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களிடம் வழங்கினேன். அதேபோல அய்யாசாமி பூங்கா சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் இல்லங்களுக்கு சென்று கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.
மேலும், "வவ்வால்கள் விவசாய நிலங்களை அழிக்கக்கூடிய பூச்சிகளை சாப்பிட்டு அந்த பயிர்களை காக்கும் உற்ற தோழனாக திகழ்கின்றது. இங்கு இருக்கக்கூடிய கொசுக்களை ஒரு வவ்வால் ஒரு மணி நேரத்தில் 1200 கொசுக்களை அழிப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். மேலும் மகரந்த சேர்க்கை மூலமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வளர்வதற்கு காரணமாகவும் வவ்வால்கள் இருக்கின்றது என்று மக்களிடத்தில் எடுத்து கூறியுள்ளேன். இதற்கு பெரும் ஆதரவு மக்கள் தருவதாக கூறி இருக்கின்றார்கள். அதேபோல வவ்வால்கள் வசிக்கக்கூடிய பொதுமக்கள் 5000 பேருக்கும் தயவு செய்து பட்டாசு வெடித்து அதிக வெடி சத்தத்தை எழுப்பி புகைகளை கிளப்பி இங்கு வசிக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான வவ்வால்களை அளித்து விடாதீர்கள் என்று வாட்ஸ்அப் குரூப் மூலமாக செய்தி அனுப்பி இருக்கின்றேன்.
அதற்கும் நல்ல பதில் வந்து கொண்டிருக்கின்றது. நிச்சயமாக நாங்கள் ஒரு பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை வேறு விதமாகத்தான் கொண்டாடுவோம். பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் செய்தி அனுப்பி கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.