சாக்பீஸ் முனையில் யானை உருவத்தை செதுக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உடற்கல்வி ஆசிரியை!
12ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பை தடுக்கும் நோக்கில் சாக்பீஸ் முனையில் யானையின் உருவத்தை செதுக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் உடற்கல்வி ஆசிரியை மேனகா
காடுகளின் வளத்திற்கு இன்றியமையாத உயிரினமாக விளங்கும் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. யானைகளின் வலசை பாதைகளை மனிதன் ஆக்கிரமிப்பதால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் யானைகளை பாதுகாக்கும் வண்ணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியை மோகனா சாக்பீஸ் முனையில் யானையின் உருவங்களை செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். யானைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரவும், வேட்டையாடுதல், விபத்துக்களால் யானைகள் உயிரிழப்பை தடுக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் அதிகமாக யானைகள் வாழ்கின்றன. உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, வளர்ப்பு, பிரச்சனைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக யானைகள் 50 கிலோ மீட்டர் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இடம் பெயரும் தன்மை கொண்டவை. குறிப்பாக தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப்பெயர்ச்சி இருக்கும். யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவீத அளவுக்கு உணவு உட்கொள்கின்றன.
தினமும் 200 முதல் 250 கிலோ வரையில் இலை, தழைகளையும், 200 லிட்டர் வரை தண்ணீரையும் உணவாக யானைகள் எடுத்துக் கொள்கின்றன. உயிரினங்களிலேயே யானை மற்றும் டால்பினுக்கு மட்டும் தான், மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதனை ஒத்திருக்கும். ஒரு யானை இருந்தால் ஒரு வனத்தையும் உருவாக்கலாம் என கூறுவார்கள். அதற்கு காரணம் யானையின் சானமும், அவற்றின் அறிவுத்திறமையும் தான். யானையின் கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டவை.
இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.
இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை. விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால் 10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன.
யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.