Perungulathur Flyover: இனி போக்குவரத்து நெரிசலே இல்லாம போலாம்.. பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..
பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாடிற்காக இன்று திறந்து வைக்கப்படுகிறது.
பெருங்களத்தூர் மேம்பாலத்தை இன்று சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைக்கிறார்.
சென்னைக்கு பெரும்பாலான வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாக தான் வரும். அதுவும் பண்டிகை காலம் அல்லது விஷேச நாட்களில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமே இருக்காது. கோயம்பேட்டில் இருந்து புறப்படும் வாகனங்கள் இப்பகுதியை விஷேச நாட்களில் கடக்க குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகும். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து மக்கள் பலரும் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே பயணத்தை திட்டமிடுவார்கள்.
அதுமட்டுமின்று தினசரி அலுவலக நேரங்களில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு ரூ. 234 கோடி மதிபில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக செல்லும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு பெருங்களத்தூரிலிருந்து நெடுங்குன்றம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசன் நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றது.
இந்த நிலையில் பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் செல்லக்கூடிய மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவில்லை. ஸ்ரீனிவாசன் நகர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், ஆர்எம்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் மற்றும் வண்டலூருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வந்தனர். மேம்பாலம் திறக்கப்படாததால் மக்கள் சுமார் 4 கிமீ தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த கோரிக்கையை முன்னிட்டு இன்று சென்னையில் நுழைவாயிலான பெருங்களத்தூர், ரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைக்கிறார். இதனால் அப்பகுதியில் இனி போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.