Periyar University Issue: வினாத்தாள் சர்ச்சை - பெரியார் பல்கலைகழகத்துக்கு நோட்டீஸ்!
Periyar University Question Paper Issue: சேலம் பெரியார் பல்கலைகழகத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைகழகத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழக தேர்வில் இடம்பெற்ற கேள்வி சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வினாத்தாளை சரிபார்க்கும் கடமையில் இருந்து தவறிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், வரலாறு துறைத்தலைவர் ஆகியோர் மீது தாங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கம் கேட்டு, ஆதிதிராவிடர் & பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்(Periyar University) கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் முதுகலை வரலாற்றுத் துறையின் தமிழ்நாடு விடுதலை பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குழு அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை உறுதிபடத் தெரிவித்தது. இது குறித்து பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி அளித்த விளக்கம் பின்வருமாறு:-
பல்கலைக்கழக வினாத்தாள் அமைப்பது குறித்து பாடத்திட்டக்குழு வல்லுநர்கள் வழங்கும் பட்டியலில் உள்ள பிற பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை அனுபவத்தின் அடிப்படையில் தலைவராக ((Chairman for Question Paper Setting) நியமிக்கப்படும். குறைந்தது மூன்று வருட கற்பித்தல் அனுபவம் உள்ள பிற ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பொறுப்பினை தலைவர் என்ற நிலையில் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட பேராசிரியரே (Chairman) நியமித்து வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்.
அவர்கள் தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளதா? மதிப்பெண்கள் முறையாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளனவா? சர்சைக்குரிய வார்த்தைகள் ஏதேனும் உள்ளனவா? போன்றவற்றை தலைவர் (Chairman for Question Paper Setting) என்ற நிலையில் அவரே இறுதி செய்து பல்கலைக்கழகத்திற்கு வினாத்தாள்களை அனுப்பிவைப்பார்.
அவ்வாறு அனுப்பும் போது ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு வேறுபட்ட வினாத்தாள்கள் தயாரித்து வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் வினாத்தாள்களில் Random முறையில் இரண்டு வினாத்தாள்களில் ஒன்று அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வினாத்தாள் பல்கலைக்கழக வினாத்தாள் பிரிவால், அலுவலகப் பயன்பாட்டிற்கான வினாத்தாள் எண் (Question Paper S.No.) குறிப்பிடப்பட்டு அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
அச்சகத்திலிருந்து முழுமையாக மூடி முத்திரையிடப்பட்ட பாக்கெட்டில் கல்லூரி பெயர், தேர்வு நடைபெறும் நாள், வினாத்தாள்களின் எண்ணிக்கை மற்றும் வினாத்தாளின் வரிசை எண் ஆகியவை அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படும். வினாத்தாள்களைப் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவரும் படிப்பதற்கு அனுமதி இல்லை. எனவே இந்த சர்ச்சைக்குரிய வினா குறித்து
பல்கலைக்கழகத்திற்கு எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டதன் அடிப்படையில், மாணாக்கர்களுக்கும், பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்லூ நிர்வாகத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின் அம்மன உளைச்சலுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன், இனி வரும் காலங்களில் இவ்வாறான சர்ச்சைக்குரிய வினாக்கள் எழாதவாறு வினாத்தாள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது. மேலும் இந்த வினாத்தாள் குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.