’செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாகுமா’? - பட்ஜெட் அறிவிப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மக்கள்
விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ள செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான அறிவிக்கபடுமா வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்
தமிழ் நாட்டில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த அமைப்புடன் உள்ள ஒரே கோட்டையாக செஞ்சிக்கோட்டை உள்ளது. 13ஆம் நுாற்றாண்டில் கட்ட துவங்கி பல்வேறு கால கட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. மலையைச் சுற்றி 12 கி.மீ நீள மதில் சுவற்றை கொண்டு 1,200 ஏக்கர் பரப்பளவில் மூன்று மலைகளையும், இரண்டு சிறிய குன்றுகளையும் இணைத்தவாறு செஞ்சி கோட்டை கட்டப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் செஞ்சி கோட்டைக்கு நிகராக வேறு கோட்டை இல்லை. செஞ்சி கோட்டையை காண உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.கர்நாடக மாநிலம், ஹம்பியை தலைமையிடமாக ஆட்சி செய்த விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ் செஞ்சி கோட்டை இருந்தது. அப்போது கி.பி., 1509ம் முதல் 1529ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் செஞ்சி கோட்டையை விரிவுபடுத்தி பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். இந்திய தொல்லியல் துறையின் பரிந்துரையின் பேரில் ஹம்பியை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தி கட்டிய கோட்டை என்பதால் ஹம்பியின் தொடர் கோட்டையாக செஞ்சி கோட்டையையும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என இந்திய தொல்லியல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த செஞ்சி கோட்டையை ஒன்றிய, மாநில அரசுகள் இதுவரை சுற்றலா தலமாககூட அறிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் செஞ்சி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்
செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும் என கூறியே ஓட்டு கேட்டு வந்தனர். இந்த முறை தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அமைச்சர் மஸ்தான் மட்டுமின்றி, மார்ச் 25ம் தேதி செஞ்சியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் செஞ்சி கோட்டையை பன்னாட்டு சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த முறை தி.மு.க., அரசின் பட்ஜெட்டில் தேர்தலின் போது மாவட்ட அளவில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா வாய்ப்பாகவும், செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கனவாகவும் உள்ள செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறவேற்ற இது சரியான தருணமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி செஞ்சி கோட்டையை பன்னாட்டு சுற்றுலா தலமாக அறிவிக்க சர்வதேச தரத்துடனான கட்டமைப்புகள் தேவை. இதை செயல்படுத்த முதல் கட்டமாக செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம் செஞ்சியில் சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டல், ஏரியில் படகு சவாரி, அருங்காட்சியகம், தங்கும் விடுதிகளை ஏற்படுத்த முடியும். அத்துடன் கோட்டையில் புதிதாக பூங்காக்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதிகளை செய்ய வழி பிறக்கும். தேர்தல் வாக்குறுதிப்படி செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு அமைச்சர் மஸ்தான் கொண்டு சென்று, வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு செஞ்சி நகர மக்களிடம் ஏற்பட்டுள்ளது.