பொதிகை ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: போலீஸ் விசாரணை
சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பொதிகை ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி எறிந்ததால் பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பொதிகை ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி எறிந்ததால் பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்காசியிலிருந்து சென்னையை நோக்கி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணப்பட்டது. ரயில் திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் பகுதியை வந்தடைந்தபோது வெளியில் நின்றிருந்த சில மர்ம நபர்கள் ரயிலை நோக்கி கற்களை வீசினர். இதில் ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த கடையநல்லூரை சேர்ந்த முத்துச்செல்வி (29) தலையில் காயமுற்றார். சில பயணிகளுக்கு சிற்சில காயம் ஏற்பட்டது. பயத்தில் பயணிகள் ரயில் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். காயமடைந்த பயணி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ரயில் 20 நிமிடங்களுக்குப் பின்னர் புறப்பட்டது.
இது தொடர்பாக ரயில்வே எஸ்.பி. டி.செந்தில்குமார் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய கேரள ரயில் சம்பவம்:
அண்மையில் கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நபர் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் குறைந்த பயண நேரம், செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில்களில் பயணிப்பார்கள். ரயில்வே துறை சார்பில் பயணிகளின் வசதிக்கேற்ப பொதுப்பெட்டி, படுக்கை வசதிக் கொண்ட பெட்டி, ஏசி பெட்டிகள் என பல வகைகளைக் கொண்ட ரயில்களை இயக்கி வருகிறது. இந்த பயணங்களின் போது அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதனை தடுக்க ஓடும் ரயிலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது வியாழக்கிழமை, சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயங்குகிறது. மதியம் 2.55 மணியளவில் ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10.55 மணியளவில் தான் கண்ணூர் சென்றடையும்.
இப்படியான நிலையில் வழக்கம்போல அந்த ரயில் கடந்த 2ஆம் தேதி (ஏப்ரல் 2) ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயில் இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறியுள்ளார். கோழிக்கோடு மற்றும் க்யூலாண்டி ரயில் நிலையங்களுக்கு நடுவே கோரபுழா ரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் ரயில் சென்றபோது அந்த நபர் யாரும் எதிர்பாராத வகையில் சக பயணிகள் மீது திரவம் ஒன்றை தெளித்து தீ வைத்துள்ளார். தீயில் இருந்து தப்பிக்க கீழே குதித்த 3 பேர் உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இந்த வழக்கில் டெல்லி ஷாகின்பாக் பகுதியை சேர்ந்த ஷாருக் சைபி கைது செய்யப்பட்டு அவர் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் உள்ளூரில் இருந்து அவருக்கு கிடைத்த உதவிகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பின் துாண்டுதலின் அடிப்படையில் குற்றவாளி இந்த செயலை செய்துள்ளார். அவருக்கு உள்ளூர் உதவியும் கிடைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தனி மனித தாக்குதல் அல்ல. திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.