"சதிராட்டத்தை தொடர்ந்து கற்றுக்கொடுப்பேன்" - பத்மஸ்ரீ விருது பெற்ற 82 வயது முத்துக்கண்ணம்மாள்
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள முத்துக்கண்ணம்மாள் தள்ளாத வயதிலும் தொடர்ந்து சதிராட்டத்தை கற்றுக்கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த சதிர் ஆட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாளுக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு தமிழ்நாட்டின் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பத்மஸ்ரீ விருது பெற்ற முத்துக்கண்ணம்மாள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த உணர்வு விலைமதிப்பற்றது. இந்த விலைமதிப்பற்ற உணர்வால் எனக்கு பசிக்கக்கூட இல்லை. வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பொள்ளாச்சியில் உள்ள கோவிலில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. ஒருவேளை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் 10 நாட்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பேன்.
எங்கள் குடும்பமே சதிராட்ட குடும்பம். இதனால், நான் சதிர் ஆட்டம் கற்றுக்கொண்டது என்பது இயற்கையானது. யாருக்கெல்லாம் சதிர் ஆட்டம் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளதோ அவர்களுக்கு எல்லாம் நான் தொடர்ந்து கற்றுக்கொடுப்பேன். இதன்மூலம், பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற 82 வயதான சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் தற்போது திருச்சி மாவட்டம் விராலிமலையில் வசித்து வருகிறார். முத்துக்கண்ணம்மாள்தான் சதிர் ஆட்டம் ஆடும் கடைசி தேவதாசி ஆவார். தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிக்கப்படும் முன்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்காக பொட்டு கட்டி கோவிலில் ஆட தேர்வு செய்யப்பட்ட 32 தேவதாசிகளில் ஒருவராக முத்துக்கண்ணம்மாள் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதற்காக, அவர் தனது 7 வயது முதலே சதிர் ஆட்டத்தை கற்றுக்கொண்டார். அவருக்கு அவரது தந்தையே சதிர் ஆட்டத்தை கற்றுக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் சதிராட்டத்தின் மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக முத்துக்கண்ணம்மாள் மட்டும் தொடர்ந்து சதிராட்டத்தை ஆடி வந்துள்ளார். 7 தலைமுறைகளாக சதிராட்டத்தை ஆடி வரும் முத்துக்கண்ணம்மாளின் வாரிசுகள் சதிராட்டத்தை கற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், தனது பேத்திகளுக்கு முத்துக்கண்ணம்மாள் சதிராட்டத்தை கற்றுக்கொடுத்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2018ம் ஆண்டு தக்ஷன சித்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நேரடித் தேர்தல் யாருக்கு? மறைமுகத் தேர்தல் யாருக்கு? வாக்காளர்களே தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்