Oxygen shortage | எல்லாமே பக்கா ப்ளான்.. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தட்டித்தூக்கிய அதிகாரிகள் - சமாளித்தது எப்படி?
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாட்டு அதிகாரிகள் திறம்பட கையாண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் தீவிரமாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாகுறை மிகவும் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால் முதல் அலையில் தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவை 280 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இதுவே இரண்டாவது அலையில் மே 17ஆம் தேதியின்படி 603 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடும் தட்டுப்பாடு இருந்தது.
இந்தச் சூழலை எவ்வாறு கையாண்டோம் என்பது தொடர்பாக தமிழ்நாடு அதிகாரிகள் சிலர் டைம்ஸ்நவ் தளத்திற்கு பேட்டியளித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாளர் டாக்டர் ஷர்மிளா, “ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்னையிலிருந்து ஆக்சிஜன் டெங்கர் லாரியை அனுப்பி வைத்தோம். அந்த லாரி வழி முழுவதும் ட்ராக் செய்து வந்தோம்.
இந்தச் சூழலில் திடீரென அந்த லாரி எங்கு இருக்கிறது என்ற தகவல் எங்களுக்கு தெரியாமல் போனது. இதன் காரணமாக தகுந்த நேரத்தில் ஆக்சிஜனை கொண்டு சேர்க்க முடியுமா என்ற நிலை எழுந்தது. அப்போது நாங்கள் அனைவரும் தூக்கம் இல்லாமல் பணி செய்து வந்தோம். மேலும் மதுரைக்கு விமான வழியில் ஆக்சிஜன் அனுப்புவது தொடர்பாகவும் யோசித்து வந்தோம். அந்த சமயத்தில் லாரி எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். இறுதியில் சரியான நேரத்தில் ஆக்சிஜன் டெங்கரை கொண்டு சேர்த்தோம்” எனக் கூறினார். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாகுறையை போக்க ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்ள உமாநாத் ஐஏஎஸ், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், கே.நந்தகுமார் ஐஏஎஸ், தாமரை கண்ணன் ஐபிஎஸ், பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்தனர்.
இது தொடர்பாக தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குநர் டாரேஸ் அகமது, “மே மாதத்தின் பாதியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக நள்ளிரவில் தகவல் அளித்தார். உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தோம். அத்துடன் தேவைப்பட்டால் தஞ்சாவூருக்கு புதுச்சேரியிலிருந்து ஆக்சிஜன் எடுத்து வரவும் ஏற்பாடு செய்தோம். எனினும் மின்சார வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் இந்த பிரச்னை பெரிதாகமல் தடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பல நேரங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சிக்கலான சூழலை அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு போக்கினர். அத்துடன் அவை பெரிதாகாமல் பார்த்து கொண்டனர். இந்த இக்கட்டான சூழலில் ஒரே நேரத்தில் 10 மருத்துவமனைகளில் இருந்து ஆக்சிஜம் தேவை என்று அழைப்பு வந்தது. அப்போது இருந்த ஆக்சிஜனை சரியாக பிரித்து கொடுக்க முயற்சி எடுத்தோம். மேலும் தமிழ்நாட்டிலிருந்து அதிகாரிகளை மகாராஷ்டிரா, ஜம்சேத்பூர், ஒடிசா உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி ஆக்சிஜன் பற்றாகுறை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவை தற்போது 600 மெட்ரிக் டன்னில் இருந்து 220 மெட்ரிக் டன் ஆக குறைந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் தேவை தொடர்பாக வரும் அழைப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: BJP Files Defamation Suit : 'மன்னிப்பு... ரூ.100 கோடி அபராதம்...!’ - தினமலருக்கு நோட்டீஸ் அனுப்பிய பா.ஜ.க.!