TN Rain Alert: சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்.. எந்த தேதிகளில்? மழை அப்டேட் இதோ..
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில், ”அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (28-11-2023) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் புயலாக வலுப்பெறக்கூடும் .இது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் ஒன்பது செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு பொருத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த வரும் ஐந்து தினங்களுக்கு அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் அடுத்த வரும் சில தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கப்பருவமழை பொறுத்த வரையில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒன்று முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவு 32 சென்டிமீட்டர் இயல்பு அளவு 35 சென்டிமீட்டர். இது எட்டு சதவீதம் குறைவாகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் புயல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எந்த திசையை நோக்கி நகரும் என்பது பொறுத்து தமிழகத்திற்கு மழை இருக்கும்” என தெரிவித்துள்ளார்.