OPS vs EPS: 'பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படக் கூடாது' மேல்முறையீட்டு மனுவில் ஓ.பி.எஸ் கோரிக்கை..!
OPS vs EPS: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் மற்றும் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்த அந்த மனுவில், “ தனி நீதிபதி உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தனி நீதிபதி உத்தரவு கட்சி விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபதி செய்தது. இதையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுகொண்டார்.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஜூலை 11, 2022 தீர்மானங்களுக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பொருள் பொதுக்குழு செல்லுபடியாகும், அதன் தீர்மானங்கள் செல்லுபடியாகும்” என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி ஓபிஎஸ், மற்ற ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் கட்சியால் ரத்து செய்யப்பட்டன. ஓபிஎஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.