OPS Slams DMK: அப்ப.. இதுதான் திமுகவின் திராவிட மாடலா? ஜெயலலிதாவிற்கு நடந்தது..! ஓபிஎஸ் கொந்தளிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டது உண்மை தான் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளஎர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டது உண்மை தான் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளஎர்.
ஓபிஎஸ் அறிக்கை:
கழக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் , நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகாபாரதத்தில் திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி, பெண்கள் எங்கு இழிவுபடுத்தப்பட்டாலும் அதனை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கனிமொழிக்கும், நாடாளுமன்றத்திற்கும் 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தி.மு.க.வினரால் அவமானப்படுத்தப்பட்டதையும், அவருடைய புடவை இழுக்கப்பட்டதையும், ஜெயலலிதா சபதம் எடுத்ததையும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டார். இது உண்மையிலே நடைபெற்ற சம்பவம்.
முதலமைச்சருக்கு கண்டனம்:
ஆனால், இந்தச் சம்பவம் நாடகம் என்று தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூறினர். இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிகழவில்லை என்றும், அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது தெரியும் என்றும் பேட்டியளித்து இருக்கிறார். நடந்த சம்பவத்தை, நடந்த உண்மையை திரித்துப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது குறித்து 25-03-1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய ஜெயலலிதா, "இது கருப்பு தினம் மட்டுமல்ல. வன்முறையால் அரசியலில் எதையும் சாதித்து விட முடியும் என்று தப்புக் கணக்கு போடுகிறவர்களுக்கு பாடமாக அமையும் தினம்" என்று குறிப்பிட்டார்கள். தி.மு.க.வின் இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களையெல்லாம் மனதில் வைத்துதான் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் 'சாட்டை அடி', 'சம்மட்டி அடி' கொடுத்தார்கள் என்பதை தி.மு.க. தலைவருக்கு நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இதுதான் திராவிட மாடலா?
இது மட்டுமல்லாமல், 25-03-1989 ஆம் நாளைய நடவடிக்கைக் குறிப்புகளிலுள்ள செய்திகள் குறித்து 26-03-1992 அன்று அப்போதைய பேரவைத் தலைவர் தீர்ப்பு வழங்கியிருப்பதையும், அவை நடவடிக்கைக் குறிப்புகள் என அன்றைய தினம் 25-03-1989 அன்று நடந்ததாக வெளியிடப்பட்டுள்ள இக்குறிப்புகள் அனைத்தும் நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானவை; தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை; மோசடி என்று தீர்ப்பளித்திருப்பதையும் தி.மு.க. தலைவருக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை நன்கு கண்ணுற்றும் அதனை 'நாடகம்' என்று சொல்வதுதான் 'நாடகம்'. 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை 'நாடகம்' என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். அன்று நடந்தது உண்மை என்பதை மக்கள் அடுத்து வந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் உணர்த்திவிட்டார்கள் என்பதை தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவேளை உண்மையை 'நாடகம்' என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்” என குறிப்பிட்டுள்ளார்.