கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு… போராட்டத்தில் இறங்கிய கர்நாடக விவசாயிகள்!
கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டது.
காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. கர்நாடக பாஜக கடும் கண்டனம்.
10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவு
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி மீதமுள்ள தண்ணீரை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து கர்நாடக விவசாய அமைப்பினர் நேற்று ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே காவிரி ஆற்றில் இறங்கினர். அப்போது, கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்து வருவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீசார் அவர்களை ஆற்றில் இருந்து மீட்டு கைது செய்தனர்.
பாஜக கடும் கண்டனம்
இந்த அறிவிப்புக்கு பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "கர்நாடகாவில் போதிய மழை இல்லாத நிலையில், இங்குள்ள விவசாயிகளுக்கே இன்னும் தண்ணீர் திறக்கப்படாத நிலை உள்ளது. அதற்குள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கத் தவறிய காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்,'' என்றார்.
குமாரசாமி விமர்சனம்
ம.ஜ.த., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறுகையில், ''கர்நாடக அரசு கர்நாடக விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க., உடன் கூட்டணி வைத்திருப்பதால், அவர்களை மகிழ்விப்பதற்காக காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுள்ளது. கர்நாடக அரசு தண்ணீர் திறக்காவிட்டால், அவர்களின் 'இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்பதற்காகவும், கூட்டணி தர்மத்தை காக்கவும் அரசாங்கத்தை பயன்படுத்துகிறார்கள். கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்,'' என்று கூறினார்.
22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
நேற்று மாலை நிலவரப்படி, மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 110.20 அடியாக குறைந்துள்ளது. வினாடிக்கு 3 ஆயிரத்து 78 ஆயிரம் கன அடி தண்ணீர் அந்த அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.10 அடியாக உள்ளது. அங்கு வினாடிக்கு 2,022 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், வினாடிக்கு 6,825 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மொத்தம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில், மேகேதாட்டு அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.