Governor RN Ravi: இன்னும் ரெண்டே நாட்கள்தான்.. தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரா? ஆர்.என். ரவியின் பதவி நீடிக்குமா?
Governor RN Ravi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் இன்னும் இரண்டு தினங்களில் முடிவடைய உள்ளது.
Governor RN Ravi: ஆர்.என். ரவியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முடிவடையும் ஆளுநர் ஆர். என். ரவி பதவிக்காலம்:
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றார். முன்னதாக, 2019ம் ஆண்டு நாகலாந்தின் ஆளுநராக செயல்பட்டார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் இன்னும் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. இதனால், ஆர். என். ரவியின் ஆளுநர் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீடிக்குமா?
ஆர்.என். ரவி ஆளுநராக பொறுப்பேற்றது முதலே தமிழக அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். அதேநேரம், அவர் மத்தியில் ஆளும் பாஜகவின் ஊதுகுழலாகவே தமிழ்நாட்டில் செயல்படுவதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அண்மையில் தான், புதுச்சேரி, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்களை குடியரசு தலைவர் நியமித்தார். அப்போது கூட தமிழ்நாட்டிற்கான புதிய ஆளுநர் தொடர்பான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இந்த சூழலில், ஆர்.என். ரவியின் பதவிக்காலம் 2 நாட்களில் முடிவடைய உள்ளதால், தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லியில் முகாமிட்ட ஆர்.என். ரவி:
ஆளுநர் ரவி அண்மையில் டெல்லி சென்றிருந்தபோது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்தார். அதேநேரம், குடியரசு தலைவரை சந்திக்கும் அவரது முயற்சி தோல்வியில் சந்தித்தது. இதனால், ரவியின் பதவி நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேநேரம், அவர் பாஜகவிற்கு நெருக்காமனவராகவும், நம்பிக்கைக்குரிய நபராகவும் இருப்பதால், தமிழ்நாட்டின் ஆளுநராக தொடர அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனைத்து கேள்விகளுக்கும், இன்னும் இரண்டு தினங்களில் பதில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுடன் முட்டல், மோதல்:
நாட்டில் பாஜக ஆளாத மாநிலங்களில், அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே மோதல் என்பது வாடிக்கையாகிவிட்டது. அதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. ஸ்டாலின் தலைமயிலான திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் பல்வேறு இடங்களில் நேரடி கருத்து மோதல் ஏற்பட்டது. சனாதனம், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், திமுக உடன் நேரடி மோதல் போக்கை பின்பற்றினார். முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் எந்த பலனும் இல்லை, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும், திராவிட மாடல் என்பது பிரித்தாளும் கொள்கை, அரசு தயாரித்த உரையை சட்டமன்றத்தில் படிக்காமல் புறக்கணித்தது என தடாலடியான செயல்களால் ஆர்.என். ரவி பொதுமக்களிடையே பேசுபொருளானார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல், பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமித்ததும் சர்ச்சயை ஏற்படுத்தியது.
இதனிடையே, சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதாக, தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்தார். ஆளுநர் மாளிகை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளையும், தமிழக அரசு புறக்கணித்தது. ஆர்.என். ரவிக்கு எதிராக பல்வேறு கண்டன ஆர்பாட்டாங்களும் தமிழக அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.