Lorry Strike: தமிழ்நாடு முழுவதும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!
ஆறு லட்சம் லாரிகள் மற்றும் 20 லட்சம் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் பங்கேற்பு. ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பாதிப்பு.
தமிழ்நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், மாநில லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம் மற்றும் வாகன பழுதுபார்ப்போர் சங்கம் என பல்வேறு இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, காலாண்டு வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும் ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்திலும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் தனராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தமானது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள லாரி மார்க்கெட், செவ்வாய்பேட்டை, லீ பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் தனராஜ், ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு வரி உயர்வை 40 சதவீதம் அளவில் அரசு உயர்த்தி உள்ளது. எனவே காலாண்டு வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும் ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தப்படி இன்று 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் மற்றும் 20 லட்சம் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என்று கூறினார்.
மேலும்"இதனால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பாதிப்பு ஏற்படும். இதனால் 200 கோடி ரூபாய் அளவில் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அரசு அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றார். இன்று போராட்டத்தின் போது, வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் அப்படியே அந்தந்த மாநில எல்லையிலேயே நிறுத்தப்படும். கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய லாரிகள் அத்திப்பள்ளியிலும், புதுவையில் இருந்து வரக்கூடிய லாரிகள் புதுச்சேரி எல்லையிலும், ஆந்தரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். தமிழகத்தை போன்று பிற மாநிலங்களிலும் ஆன்லைன் மூலமாக வழக்கு போடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான ஆன்லைன் வழக்குகள் போடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்" என்று கூறினார்.