ஆம்னி பேருந்துகள் முடக்கம்! 70 லட்சம் அபராதம்: ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி! தமிழக அரசு என்ன செய்யும்?
கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு

"கேரளா போக்குவரத்து துறை 70 லட்சம் அபராதம் விதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளை கண்டித்து, தமிழக ஆம்னி பேருந்துகள் செயல்பாடு நிறுத்தப்படுவதாக ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது"
கேரளாவில் ஆம்னி பேருந்துகள் ஓடாது
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (07.11.2025) தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
70 லட்சம் அபராதம்
சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கிடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
ஐயப்பன் பக்தர்களுக்கு பாதிப்பா ?
இந்நிகழ்வை தொடர்ந்து இன்று (07.11.2025 - 8.00 PM) முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படையும் மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இந்த விஷயத்தில் உடனடியாக தமிழக அரசும் கேரளா அரசும் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது





















