OPS Press Meet: செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது.. திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு - ஓபிஎஸ் அறிவிப்பு..
.வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏப்ரல் 24ம் தேதி திருச்சியில் தங்களது அணி சார்பில் மாநாடு நடத்த உள்ளதாகவும் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழாவை குறிப்பிடும் வகையில் அந்த மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாநாட்டை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர் செல்வம் பேட்டி:
தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் நாளை பிரதமரை சந்திப்பேன், நாளை தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறியுள்ள விசயங்கள் தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது சரியான தீர்ப்பை மக்கள்தான் கொடுத்தனர், மக்களை நம்புகிறோம். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். கர்நாடகாவில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவோம். அதிமுக விதிகளின்படி 5 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகப் பொறுப்புக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்களே தேர்வு செய்வர், தொண்டர்களுக்கு எம்ஜிஆர் கொடுத்த உச்சபட்ச உரிமை, மரியாதை அது என்றார்.
ஜெயலலிதா இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம். ஆனால் தற்போது அவர்களாகவே பொதுச்செயலாளரை அறிவிப்பு செய்து கொண்டுள்ளனர்.
இந்த உலகம் உள்ளவரை அதிமுக இருக்கும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருப்பார். சர்வாதிகார அடிப்படையில் அவர்கள் பொதுச்செயலாளர் என அறிவிப்பு செய்து கொண்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர்களை விலைக்கு வாங்கினால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் சூழல் உள்ளது.நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறவில்லை, தலைவர், ஒருங்கிணைப்பாளர் போல ஏதேனும் ஒரு உச்சபட்ச பதவிக்கு தேர்தல் வைத்தால் அதில் போட்டியிட தயார் என்றுதான் கூறினோம்.
ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர். எம்ஜிஆர் தோற்றத்தில் கண்ணாடியும், குல்லாவும் அணிந்து எடப்பாடி பழனிசாமி எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மன வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் அவர்களை ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கட்சியை கைப்பற்றி விட்டோம் என்ற அகம்பாவத்துடன் நடத்து கொண்டால் தொடர்ந்து தோல்வியைதான் சந்திப்பர். கட்சி நலன் கருதியே நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.
சில நேரம் கட்சி பெயர், சின்னம் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியத்துவம் பெறும். தொண்டர்களும், மக்களும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் நிலையானது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணம் நாங்கள் நடத்தும் மாநாட்டின் மூலம் தெரியவரும் என்றார். மேலும், ஜெயலலிதாவின் முழு உருவ வெங்கலச்சிலையை மாவட்டம்தோறும் வைக்க வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
பண்ருட்டி ராமசந்திரன் பேட்டி:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தியும் பண, படை பலத்தை பயன்படுத்தியும் மக்கள் அவர்களை ஏற்கவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாயை விலகிவிடும் என்று நம்புகிறோம் என்றார்.
நாங்கள் இனி மக்கள் மன்றம் செல்ல உள்ளோம். ஏப்ரல்24 ம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழா ஆண்டு என திருச்சியில் முப்பெரும் விழாவை நடத்துகிறோம்.. மாநாட்டை தொடர்ந்து பன்னீர் செல்வம் மக்களை நேரில் சென்று சந்திப்பார். இனி எடப்பாடி பழனிசாமி அணி குறித்து நாங்கள் விமர்சிக்கவோ, பேசவோ மாட்டோம் என தெரிவித்தார்.