பெரியார் பிறந்தநாள் - முதல்வர் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு!
‛தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையே சாரும்’ -ஓபிஎஸ்
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார்.
பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக எம்எல்ஏ நயினார் நகேந்திரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வரவேற்றேனர். இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கப் பாடுபட்டவர்களையும், தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும், மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தியவர்களையும், சமூக போராட்டங்களை நீதிக்காக குரல் கொடுத்தவர்களையும் கௌரவிக்கும். வகையில், அவர்களுக்கு திருவருவச் சிலைகள் அமைப்பதையும், நினைவு மண்டபம் கட்டுவதையும், அரசுக் கட்டடங்களுக்கு அவர்களின் பெயர்களை வைப்பதையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சிக் காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தது.
இந்திய விடுதலைக்கு முன், மொழிப்பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவேரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டியவர் மகாகவி பாரதியார் என்றால், விடுதலைக்குப் பின் பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம், சமூகநீதி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி தமிழ்நாட்டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை அண்ணா, எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையே சாரும்.
சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சமூக நீதிக்காக பாடுபட்டவர்களை பெருமைப்படுத்தும் பணியையும் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை பாதுகாத்ததற்காக, 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகம் வழங்கி கௌரவித்தது என்பதைத் இந்தத் தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
"அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து போகாமல் எவன் சொன்ன சொல்லானாலும் பகுத்தறிந்து உள் அறிவால் உணர்" என்று சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதை வற்புறுத்தி, மக்களிடையே எடுத்துச் சென்று தமிழ்நாட்டில் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாள் "சமூக நீதி" நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
இந்த அறிவிப்பிற்கு காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
Periyar Statue Issue: யார் பெரியார் ? மோதிக்கொண்ட ஸ்டாலின் vs சீமான்!