Seeman: இயேசு மீது சத்தியமா... யாருடன் கூட்டணி என்பதை அறிவித்த சீமான்!
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அரசியல் களத்திற்கு புதியதாக வந்தவரான விஜய் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் முக்கிய கட்சிகளாக உள்ளனர்.
தனித்துப் பாேட்டியிடும் சீமான்:
தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கியபோது விஜய், சீமானுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் கொள்கையாக கொண்டு செயல்பட உள்ளதாக அறிவித்தார். திராவிடத்தை மிக கடுமையாக எதிர்க்கும் சீமான் பின்னர் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தார்.
இந்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது,
தனித்துவத்தோடு நிற்போம்:
இப்போதும் தனித்து நிற்போம். தனித்து நிற்போம், தனித்துவத்தோடு நிற்போம். நீ வலிமை உள்ளவனாக ஆக வேண்டுமா? தனித்து நின்று போராடுங்கள்.
பிறர் தோள் மீது ஏறி நின்று நீ உயரமானவன் என்று காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டு. 20 நாடுகள் எதிர்த்து நின்றபோது துணிந்து போராடியவரின் பிள்ளைகள். அதனால், தோல்வியின் போது துவண்டு போகும் பிள்ளைகள் நாங்கள் கிடையாது.
இயேசு மீது ஆணை:
வெற்றியையும், தோல்வியையும் சம அளவிலே மதிக்கக்கூடிய வீரர்கள் நாங்கள். எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான். இதனால், எந்தக் காலத்திலும் சிலவற்றில் உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
இதனால், இறைவன் இயேசு மீது ஆணையாக எவருடனும் கூட்டணி கிடையாது. இந்த நிலத்தில் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர். இந்த நிலத்தில் தொடர்ச்சியாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சி நாம் தமிழர்தான். அப்போது எது பெரியது?
மக்களுடன்தான் உடன்பாடு:
8 கோடி மக்களுடன் தேர்தல் உடன்பாடு, கொள்கை உடன்பாடு வைத்திருக்கம் கட்சி நாம் தமிழர் கட்சி. நாங்கள் மக்களைத்தான் நம்புகிறோம். நாங்கள் மக்களுக்கானவர்கள். அதனால், மக்களோடு உடன்பாடு. எங்கள் கொள்கை, கோட்பாடுகளை மக்களுக்கு விதிக்கிறோம். அதை மதிப்புமிக்க வாக்குகளாக அறுவடை செய்து வளர்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கடந்த 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள கட்சியாக நாம் தமிழர் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை தன்னகத்தே வைத்துள்ளது.
திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதையே சீமான் கொள்கையாக வைத்து ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகிறார். அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் அவரது வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் விஜய்யின் தவெக-விற்கு செல்லும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.




















