Seeman: மருது மக்கள் இயக்க தலைவர் கைது; தி.மு.க. அரசின் அதிகாரத் திமிர் - சீமான் கண்டனம்
ஈழத்தமிழர் எங்கள் இரத்தம் என முழக்கமிட்டுவிட்டு, சிறப்பு முகாமிலுள்ளவர்களை வெளியே விடாததோடு அவர்கள் விடுதலைக்காகப் பேசுவோரையும் கைது செய்வது அதிகாரத்திமிரின் உச்சம் என சீமான் சாடியுள்ளார்.
மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி முத்துப்பாண்டியைக் கைது செய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முத்துப்பாண்டியன் கைது
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்புமுகாமிலுள்ள நான்கு தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துப்பாண்டியைக் கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சிறப்பு முகாமெனும் சித்ரவதைக்கூடத்திலிருந்து ஈழச்சொந்தங்களை வெளிவிடக்கோரி, இன உணர்வு கொண்ட மண்ணின் மகனாய் தம்பி முத்துப்பாண்டி வெளிப்படுத்திய அறச்சீற்றத்திற்கு எதிர்வினையாக அடக்குமுறையை ஏவுவது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மையாகும்.
கருத்துரிமை, சனநாயகம், சமூகநீதி என ஒருபுறம் பேசிக்கொண்டே, மறுபுறம் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும், எதிர்நிலையில் அரசியல் செய்யக் கூடியவர்களையும், அரசின் மீது விமர்சனத்தை வைக்கக் கூடியவர்களையும் அடக்கி ஒடுக்கி, அவர்களது குரல்வளையை நெரிக்க முயலும் திமுக அரசின் செயல்பாடு வெளிப்படையான சனநாயகப் படுகொலையாகும்.
அதிகாரத் திமிர்:
‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ எனத் தேர்தலுக்காக முழக்கமிட்டுவிட்டு, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களை வெளியே விடாததோடு அவர்களது விடுதலைக்காகப் பேசுவோரையும் கைது செய்து சிறைப்படுத்துவது அதிகாரத்திமிரின் உச்சம்.
இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஆணவத்தில், அதிகாரப்பலம் தரும் மமதையில், எளிய மக்கள் மீதும், மண்ணுரிமைப்போராளிகள் மீதும், இனமானத்தமிழர்கள் மீதும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை ஏவலாம்; கொடுஞ்சட்டங்களைப் பாய்ச்சலாம்; பேசவிடாது தடைபோடலாம்; சிறைப்படுத்தி செயல்பாட்டை முடக்கலாம். ஆனால், இவை யாவும் நிரந்தரமானதில்லை. அதிகாரமும் எவருக்கும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை; பெரும் பெரும் சாம்ராஜ்யங்களே சரிந்து விழுந்த வரலாறு இங்குண்டு; கொடும் ஆட்சியாளர்களே மண்டியிட்டு வீழ்ந்த வரலாறுண்டு. அதனைத்தான் ஆளும் திமுக அரசுக்கும் நினைவூட்டுகிறேன்.
உறுதுணை:
தம்பி முத்துப்பாண்டி பேசியதில் எந்தத் தவறுமில்லை; என் கருத்தைத்தான் அவர் மேடையில் எதிரொலித்தார். அதற்காக வழக்குத் தொடுத்து, சிறைப்படுத்தி, அச்சுறுத்திவிடலாம் என்றெண்ணி ஆளும் வர்க்கம் நினைக்குமென்றால், அதனைவிட மடமைத்தனம் வேறில்லை. இச்சமயத்தில், தம்பி முத்துப்பாண்டிக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் நாம் தமிழர் கட்சி துணை நிற்குமென உறுதியளிக்கிறேன்.
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசானது மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி முத்துப்பாண்டி மீது தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Harassment charges on kalakshetra: கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல் உண்மையா? வதந்தியா? விசாரணையை தொடங்கிய சென்னை போலீஸ்
புத்தக கண்காட்சியில் பெரியார், கருணாநிதியின் புத்தகங்களை தேடி வாங்கிய அமைச்சர் பொன்முடி