RATION CARD: ஒரே நாளில் ரேஷன்கார்டு... அசத்தலான வாய்ப்பு- அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
ரேஷன்கார்டு முக்கிய அடையாள அட்டையாக உள்ள நிலையில், அதில் பெயர் திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசின் திட்டங்களை பெற ரேஷன் கார்டு
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாயவிலை கடைகள் மூலம் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 34ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் 2 கோடியே 26 லட்சத்து 97ஆயிரத்து 66 ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கார்டு தற்போது முக்கிய தேவையாக உள்ளது. அரசின் திட்டங்களை பெறுவதற்கும், பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேருவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டு திருத்தம் செய்ய வாய்ப்பு
மேலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. எனவே ரேஷன் கார்டை பெறுவதற்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். அதே நேரம் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும் தினந்தோறும் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தான் ஒரே நாளில் உடனடியாக ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் மாதத்தின் 2வது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டு திருத்த முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும். வருகிற 8ஆம் தேதி சிறப்பு முகாமிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 08.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி சிறப்பு முகாம்
இந்த சிறப்பு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போல தமிழகத்தில் அந்த அந்த மண்டலங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




















