Northeast Monsoon Rain: மக்களே உஷார் - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை மையம் அறிவிப்பு
Northeast Monsoon Rain: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனால் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் அரபிக்கடலில் புயல் காரணிகளால் தமிழ்நாட்டில் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
”வடகிழக்கு பருவமழை தொடங்கியது”
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன். “ தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் வடகிழக்கு பருவமழையின் ஆரம்பகட்டத்தின் தாக்கம் லேசானதாகவே இருக்கும். அடுத்த 3 தினங்களை பொருத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை மற்றும் குமரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, ஏமன் கடற்கரையை நோக்கி செல்கிறது. து தொடர்ந்து தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.
வங்கக் கடல் பகுதியில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையிலும், வடகிழக்கு திசையிலும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து செல்லக் கூடும். இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும் நிறைவடந்த பிறகு தான், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். மீனவர்கள் அக்டோபர் 25ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கும், அக்டோபர் 26ம் தேதி வரை வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்” என பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.