Velumani Case: சிக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி? நடவடிக்கை எடுக்க தடையில்லை..!- உயர்நீதிமன்றம் அதிரடி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![Velumani Case: சிக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி? நடவடிக்கை எடுக்க தடையில்லை..!- உயர்நீதிமன்றம் அதிரடி no restrictions to take action against former minister sp velumani in tender case- chennai high court Velumani Case: சிக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி? நடவடிக்கை எடுக்க தடையில்லை..!- உயர்நீதிமன்றம் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/72ca5a182bff92a49e55e5bdbddc1d5b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெண்டர் முறைகேடு புகார்:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில், சாலை மறு சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்காக 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குற்றச்சாட்டின் விவரங்கள்:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கார்த்திகேயன், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில், சுமார் 300 கோடி ரூபாயில் 3,800 சாலைகளை சீரமைப்பதற்காகவும், ரூ.290 கோடியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகவும் விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அதோடு, ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இடைக்கால உத்தரவு:
மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணை முடிவடைந்து அதுதொடர்பான முடிவுகள் சீலிடப்பட்ட அறிக்கையில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதமே இடைக்கால உத்தரவையும் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், அறப்போர் இயக்கத்தின் சார்பிலான மனு, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நடவடிக்கை எடுக்க தடையில்லை:
அப்போது, உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை எனவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையேற்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஆரம்பகட்ட விசாரணை அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என கூறி, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசுக்கு எந்த தலையீடும் இருக்கக் கூடாது என்பதால், அவர்களுக்கு அனுமதி அளித்து இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் விளக்கமளித்தனர்.
அடுத்த கட்டம் என்ன?
இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)