School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையமும் கோவை, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக ஜூன் 28 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 28° முதல் 29° செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.