மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்.. திருப்பூர் சம்பவத்தை கையில் எடுத்த NHRC
திருப்பூரில் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கடந்த மே 19ஆம் தேதி அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது மரணம்:
எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மற்றொருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கடந்த மே 21 ஆம் தேதி அன்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 10ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளூர் அதிகாரிகளின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
கையில் எடுத்த மனித உரிமைகள் ஆணையம்:
எனவே, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையின் நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதேனும் இருந்தால், அது தொடர்பான விவரங்களும் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பிறகும், மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னும் தொடர்ந்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற காரணங்களை காட்டி பாகுபாடு காட்டுவது அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
NHRC, India takes suo motu cognizance of the reported death of three workers and another’s condition critical due to asphyxiation while cleaning a sewage tank without safety gear at a private industrial unit, Tiruppur district, Tamil Nadu. #HumanRightsViolation #NHRCIndia pic.twitter.com/dLX8vBMY0H
— NHRC India (@India_NHRC) May 27, 2025
ஆனால், மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவல தொழிலில் சாதியின் அடிப்படையில் ஆட்களை பணி அமர்த்துவது மனிதத்தையே கேள்விக்குள்ளாக்கும் விதமாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.





















