(Source: ECI/ABP News/ABP Majha)
TN E Pass | முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ புதிய இ பாஸ் - முழுவிவரம் உள்ளே!
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இ பாஸ் முறையில் புதிய சேவைகள் சிலவற்றை அரசு தற்போது அறிவித்துள்ளது
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தனி இ பாஸ் வழங்கும் சேவையை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 31-ஆம் தேதி வரை எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேலும் ஒரு வாரத்திற்கு (7-ஆம் தேதி) வரை எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
"கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வந்த நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார். இந்நிலையில் இந்த தடைக்காலத்தில் அவசர தேவைகளுக்காக மக்கள் பயணம் செய்ய இ-பாஸ் முறை சென்ற ஆண்டில் இருந்தே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவசர மருத்துவ தேவை, இறப்பு போன்ற விஷயங்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தனி இ பாஸ் வழங்கும் சேவையை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது பலதரப்பில் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.