புதிய வகை கொரோனா வைரஸ்... ஏசி ரூமுக்குள்ளே ரொம்ப நேரம் இருக்காதீங்க... அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா? - அரசு மருத்துவர் விளக்கம்
தற்போது சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவி வருகின்றன. அதனால் காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பு இருக்கலாம் என மருத்துவர் ஜோதி தெரிவித்தார் .

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடும் தொண்டை வலியை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது. அதன்பின் கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ’நிம்பஸ்’ (Nimbus) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அந்த மாகாணத்தில் தொற்று பாதிக்கப்படுவோரில் 37 விழுக்காடு பேருக்கு நிம்பஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வகை வைரஸின் அறிகுறி தொண்டையை அறுப்பது போன்றும், தொண்டையில் பிளேடு சிக்கியது போன்றும் வலியை ஏற்படுத்துவதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏசி ரூமுக்குள் கொரோனா பரவுமா ?
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பற்றி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், சில வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவர் ஜோதி தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் மக்களை மீண்டும் தொற்றுக்கு ஆளாக்குகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தற்போது பருவமழைக் காலம் என்பதால் சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவி வருகின்றன. அதனால் காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பு இருக்கலாம் என மருத்துவர் ஜோதி தெரிவித்தார்
அறிகுறிகள் என்ன?
முந்தைய ஓமிக்ரான் வகைகளுடன் ஒப்பிடும்போது NB.1.8.1 அதிக கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், அதன் பரவல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.
பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி, சோர்வு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, பசியின்மை மற்றும் பொது உடல்நலக்குறைவு ஆகியவை அடங்கும். அறிகுறிகள் பெரும்பாலும் லேசானது முதல் மிதமானது வரை இருந்தாலும், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மட்டும்தான் சிக்கலை சந்திக்க நேரிடும்.
தடுக்கும் வழிமுறைகள் :
கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், வெளியில் சென்றால் முக கவசம் அணிந்து செல்லுதல்,அடிக்கடி கைகளைக் கழுவவுதல், தொடர்ந்து காய்ச்சல்,இருமல், தலைவலி, சளி போன்ற அறிகுறி இருந்தால் கட்டாயமாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக தாங்களாகவே மருந்துகளை எடுக்கக் கூடாது.
முடிந்த அளவிற்கு காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும். அதிக நேரம் ஏசி ரூமில் இருப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ஜோதி தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















