NEET Suicides: இன்னும் எத்தனை ஜெகதீசன், அனிதாவை இழக்க போறோம்...? அமைச்சர் உதயநிதியிடம் அடுக்கடுக்கான கேள்விகள்..!
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஜெகதீஸின் நண்பர் ஒருவர் நீட் தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் மறைவானது நம் மனதை விட்டு நீங்குவதற்குள், அந்த மாணவரின் தந்தை செல்வசேகரும் துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் தமிழ்நாட்டை தற்போது உலுக்கி வருகிறது.
அஞ்சலி:
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் தேர்வில் 2 முறை தேர்வில் எழுதி தோல்வி அடைந்ததால் தனது மருத்துவக் கனவு நிறைவேறாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் பல மாணவர்கள் பறிகொடுத்திருக்கிறோம். ஒன்றிய அரசு தமிழக மாணவர்களின் நலனை கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இதுவரை இரண்டு முறை சட்டசபையில் நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். விரைவில் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும். தொடர்ந்து முதலமைச்சர் மாணவர்களுக்கு தவறான முடிவு எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தயவு செய்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கொடுங்கள் என ஒன்றிய பாஜக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மக்கள் மனநிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் ஐந்து வருடங்களில் 20 உயிர்களை பலி கொடுத்துள்ளோம். நீண்ட நாள் மசோதாவை, அனுப்பாமல் ஆளுநர் வைத்திருந்தார். எங்கள் அழுத்தம் காரணமாக தற்போது அனுப்பியுள்ளார். அரசியல் பேச விரும்பவில்லை. யாரையும் குறை சொல்லவும் விரும்பவில்லை. சட்டப் போராட்டம்தான் ஒரே தீர்வு.
ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். எந்தெந்த மாநிலத்திற்கு கல்வி ரீதியாக உரிமைகள் வேண்டுமோ அது கொடுக்கப்படும் என்று. எனவே விரைவில் நல்ல மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். மாணவர்கள் தயவு செய்து தப்பான முடிவு எடுக்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். ஆளுநர் புரிதலே இல்லாமல் பேசி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி:
தொடர்ந்து அங்கிருந்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியே வந்தபோது, அவரை செய்தியாளர்களும், மறைந்த ஜெகதீஸ்வரனின் நண்பர்களும் சூழ்ந்து கொண்டனர். அப்போது, ஜெகதீஸின் நண்பர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். அதில், “ நீட் தேர்வுக்காக இன்னும் எத்தனை பேரை இந்த தமிழ்நாடு இழக்க போகிறது. இன்னும் எத்தனை ஜெகதீஸனை, எத்தனை அனிதாவை இழக்க போகிறோம்..? ஒவ்வொரு முறையும் நீட் தேர்வால் உயிர் போகின்றபோதும், இதே கோரிக்கையைதான் வைக்கிறோம்.
12ம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு நீட், ஜேஇஇ என்று எத்தனை தேர்வுகள் எழுதுவது..? அப்புறம், எதற்காக 12ம் வகுப்பு படிக்க வேண்டும்..? நான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து விட்டேன், என் நண்பனால் சேர முடியவில்லை. என்னிடம் எம்பிபிஎஸ் படிக்க பணம் இருக்கிறது. என் நண்பனிடம் எம்பிபிஎஸ் படிக்க பணம் இல்லை. அவரது அப்பாவால் பணம் கட்ட முடியவில்லை. இப்போது, இதனால் என் நண்பன் ஜெகதீசனை இழந்து நிற்கிறோம்” என்று அழுந்துகொண்டே கேள்வி எழுப்பினார்.
இவற்றை எல்லாம் கேட்டு கொண்டிருந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் எந்தவித பதிலும் தராமல், மவுனமாக அங்கிருந்து கிளம்பினார்.