![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NEET Exam 2021: தொடரும் நீட் சோகம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை
நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
![NEET Exam 2021: தொடரும் நீட் சோகம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை NEET Exam 2021 Issue Another Student who wrote the NEET committed suicide for fear of failure in vellore dist NEET Exam 2021: தொடரும் நீட் சோகம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/15/53ae1676b510893d4024fdbc78649555_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு, ருக்மணி. கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் சௌந்தர்யா வயது 17. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதிய இவர், தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தனக்குத் தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுவதற்கு முன்பாகவே அச்சத்தின் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திலிருந்து மீள்வதற்குள் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வை சரியாக எழுதாத காரணத்தினாலும், தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சத்தாலும் தற்கொலை கொண்டார். நீட் தேர்வால் இவர்களின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணிய நிலையில், மேலும் ஒரு மாணவி இன்று நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
#BREAKING | நீட் தேர்வு தோல்வி பயம்: தொடரும் மாணவர்கள் தற்கொலை https://t.co/wupaoCQKa2 | #NEET | #Vellore | #TNGovt | #DMK | #MKStalin | @mkstalin | @Subramanian_ma | @AIADMKOfficial | @EPSTamilNadu pic.twitter.com/p7dXsVgmH9
— ABP Nadu (@abpnadu) September 15, 2021
முன்னதாக, மாணவி கனிமொழியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.
நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.
மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)