நீட் விலக்கு மசோதா - “இந்த முறை கண்டிப்பா அனுப்பிடுவோம்”: முதலமைச்சரிடம் ஆளுநர் உறுதி
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பதாக மக்களவையில் திமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கோரி சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார்.
இந்த நிலையில், நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதலமைச்சரிடம் ஆளுநர் ரவி உறுதியளித்துள்ளதாக ஆளுநர் சந்திப்புக்கு பின் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் இருக்கும் அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்குமாறும், சட்டமன்றத்தின் மாண்பை காக்கவும் மக்கள் உணர்வை மதிக்கவும் வேண்டும் என்று ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பதாக மக்களவையில் திமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் என்.ரவியை மாற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் என்றும் டி.ஆர்.பாலு பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்