CM MK Stalin: டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாடு.. பங்கேற்கும் 24 கட்சித் தலைவர்கள்..சூடுபிடிக்கும் அரசியல் களம்..!
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதிக்கான தேசிய மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதிக்கான தேசிய மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. மத்தியில் தொடர்ந்து இருமுறை ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும், பல மாநில கட்சிகளும் முழு முயற்சியுடன் களமிறங்கியுள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கி விட்டது. இதனிடையே டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் மாலை 4.30 மணிக்கு சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நடைபெறுகிறது.
பங்கேற்கும் 24 கட்சிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக்அப்துல்லா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் கேசவ ராவ், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சஜன் சந்திரகாந்த் புஜ்பால் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். இதேபோல் மூத்த பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், முன்னாள் நீதிபதிகள் என பலரும் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
"சமூக நீதி போராட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்வது மற்றும் சமூக நீதி இயக்கத்தின் தேசிய திட்டத்தில் இணைவது" என்ற தலைப்பு இந்த மாநாட்டின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்துக்கான தேசியக் கூட்டுத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.