Aswini Arrest : கொலை முயற்சி புகார்.. மாமல்லபுரம் பழங்குடியின பெண் அஸ்வினி கைது
கொலை மிரட்டல் வழக்கில், மாமல்லபுரம் நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூ ட்யூப் வீடியோ மூலம் பிரபலமான மாமல்லபுரம் நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி கொலை முயற்சி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்த அஸ்வினி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.அப்போது கோயில் நிர்வாகிகள் தங்களை அவமதித்ததாக வீடியோ மூலம் குற்றம்சாட்டினார். உடனடியாக இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. அதே கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபுவுடன் சென்ற அந்த குடியிருப்பை சேர்ந்த பெண்கள் அவருடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.
இதனை கடந்தாண்டு தீபாவளியையொட்டி சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் வைரலான பெண் அஸ்வினி வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அவர் வீட்டிற்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றினார். இதன்மூலம் அவர் பிரபலமானார். இதற்கிடையில் நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி மீது பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் அஸ்வினி தங்களை மிரட்டுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த விஜி என்பவரின் மனைவி நதியா என்பவருக்கும் அஸ்வினிக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரது மனைவி நதியா கடை அமைத்துள்ளார். கடை அமைப்பதில் அஸ்வினிக்கும் , நதியாவிற்கும் இடையே மோதல்இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் , வாய் தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதில், கையில் வைத்திருந்த பேனா கத்தி மூலம், அஸ்வினி நதியாவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நதியாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு 10 தையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தன் மீதான நதியா மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து அஸ்வினி திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருக்கழுக்குன்றம் மேஜிஸ்ட்ரேட் கதிரவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அஸ்வினியை புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.