நாமக்கல் சிறுமி கொலை வழக்கில் 2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் எனவும், சிறுமியின் பெற்றோர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை 27 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில் குமார் திடீரென கத்தியால் சிறுமியை வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த சிறுமியின் உறவினர்கள் தங்கராசு, முத்துவேல் ஆகியோரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு முன்பாகவே காவல்துறையினர் செந்தில் குமாரை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த செந்தில் குமாரின் தாயார் சம்பூரணம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கொலை வழக்காக மாற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி தனியார் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக செந்தில் குமார் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். சிறுமி தடுத்து வெளியே வந்த நிலையில் மற்றவர்களிடம் சொல்லிவிடுவார் என்று கொலை செய்துவிட்டதாக கூறி உறவினர்கள் குற்றம் சாட்டினர். செந்தில் குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற செயலில் இனி யாரும் ஈடுபடாமல் இருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் செந்தில் குமாருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிறுமியின் உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுமதி அளிக்கும்படியும், அதன் பின்னர் சிறுமியின் உறவினர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு அனுமதித்தனர். மேலும் செந்தில் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட செந்தில் குமார் மீது போக்சோ, கொலை வழக்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பிரேத பரிசோதனையானது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று லட்சம் இழப்பீடு வழங்கி உள்ள நிலையில், அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் எனவும், சிறுமியின் பெற்றோர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சிறுமியின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் சேலம் அரச மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.