சென்னை புறநகரில் பகலை இரவாக்கிய கனமழை! வாகன ஓட்டிகள் அவதி, வானிலை மாற்றம்
சென்னை புறநகர் பகுதியில் திடீரென வானிலை மாற்றம், பகலை இரவாக்கிய கருமேகங்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

"வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கன மழை பெய்தது"
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதியில் கனமழை
சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சுமார் 3 மணி வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. வெயில் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அக்டோபர் மாதத்தில் இருக்கிறோமா அல்லது மே மாதத்தில் இருக்கிறோமோ என பொது மக்கள் வேதனையில் இருந்து வந்தனர்.
இரவாக மாறிய பகல்
இந்நிலையில், பிற்பகல் 4 மணியளவில் வானிலை திடீரென முற்றிலும் மாறியது. அந்தப் பகுதிகளைச் சுற்றிலும் அடர்ந்த கருமேகங்கள் திரண்டதால், பகல் நேரத்திலேயே முழுவதுமாக இரவுப் பொழுதின் தோற்றம் ஏற்பட்டது. இந்தத் திடீர் இருள் காரணமாக, குரோம்பேட்டை GST சாலையில் பயணித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மிக மெதுவாகச் செல்ல நேரிட்டது.
மேலும், தற்போது அப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதால், அனல் காற்றால் அவதிப்பட்ட பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வானிலை மாற்றம் காரணமாக, அடுத்த சில மணி நேரங்களில் இப்பகுதிகளில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.





















