மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?
மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத கடலூர் சட்டமன்ற அலுவலகம், மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், தி.மு.க. சார்பில் ஐயப்பனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் ஐயப்பன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் தனது தேர்தல் அறிக்கையில் தான் வெற்றிபெற்றால் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு முன்பு இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமைச்சர் எம்.சி.சம்பத் பொறுப்பு வகித்து வந்தார். அவர் கடலூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றால், தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும் என்பதால்தான் அந்த அலுவலகத்திற்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.
அவரும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒருமுறை கூட செல்லவில்லை. இதனால், அந்த அலுவலகம் புதர்மண்டி பாழடைந்த நிலைக்கு சென்றது. இந்த நிலையில், புதியதாக எம்.எல்ஏ-ஆக பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணியை மேற்கொண்டார்.
தற்போது புது வர்ணம் பூசப்பட்டு, புதர்கள் அகற்றப்பட்டு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பொலிவுடன் தற்போது உள்ளது. மூடநம்பிக்கையால் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, புதிய எம்.எல்.ஏ. திறந்திருப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.