மொத்தமாக 27 பேரும் ஆஜராகுங்க! - முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கு செக்! - குட்கா வழக்கில் நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேர் செப்டம்பர் 9 தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஏற்கனவே 2020 ஆண்டு தாக்கல் செய்த குற்றபத்திரிகையில் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.
தற்போது கூடுதல் குற்றபத்திரிகையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய், வி.இராமநாதன் ஜோஸ் தாமஸ், செந்தில்வேலவன், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா , சி. விஜய் பாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், கார்த்திகேயன் வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி கே.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதை ஏற்றுக்கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் செப்டம்பர் 9 தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 9 தேதி அனைவரும் ஆஜரானல் கூடுதல் குற்றபத்திரிகை நகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

