மேலும் அறிய

MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

”மக்களைத் தேடிப் பயணிப்போம்! மக்களின் குறைகளைத் தீர்ப்போம்!”எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஜுன் 28 ஆம் தேதி முதல் பங்கேற்ற நிகழ்ச்சிகள், தனது சுற்றுப்பயணத்தின் போது சந்தித்த மனிதர்கள், நெகிழ்ச்சியான நிகழ்வுகள், மக்களிடம் பெற்ற கோரிக்கைகள், மக்களின் அன்பில் நனைந்தது உள்ளிட்டவைகள் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிந்துகொண்டு, கட்சியின் தொண்டர்கள் இன்னும் பயணிக்க வேண்டிய பாதையில் முக்கியத்துவத்தையும் பற்றியும் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஓராண்டுகாலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜூன் 28 மாலை 4 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டேன். வழியெங்கும் மக்களின் வரவேற்பு உற்சாகத்தையும் ஊக்கத்தையும், ஓய்வின்றி உழைப்பதன் உன்னதத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. இராணிப்பேட்டை மாவட்ட எல்லையிலும், வேலூர் மாவட்ட எல்லையிலும் எழுச்சிகரமான வரவேற்பினைக் கழகத்தினரும் பொதுமக்களும் அளித்தனர். அதன்பின்னர் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குச் சென்றபோது அங்கும் நல்ல வரவேற்பு! இரவு 9 மணிக்குத்தான் திருப்பத்தூர் மாவட்டத்தை அடைய முடிந்தது.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

மறுநாள் (ஜூன் 29) அன்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து புறப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, வழியெங்கும் அலையலையாய் நிறைந்திருந்தன மனிதத் தலைகள். புன்னகை தவழும் முகத்துடன் கழகத்தினருடன் பொதுமக்களும் நிறைந்திருந்ததைப் பார்த்து, பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் என்னிடம் வாகனத்தில் சொன்னது, “நான் வாழ்நாளில் பார்த்திராத கூட்டம்” என்று, அந்த அளவு உணர்ச்சி அலை!

பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவை கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்ட காரணத்தால், கழகத் தோழர்கள் தங்கள் குருதியுடன் கலந்த கொள்கை உணர்வைக் காட்டும் வகையில் கருப்பு-சிவப்புக் கொடியை அசைத்து வரவேற்பளித்தனர். கழகத்தின் சாதனைகளை விளக்கும் வகையிலான வரவேற்புகளையும் கண்டு மகிழ்ந்தேன். மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் விளைவித்துள்ள சமூகப் புரட்சியை வெளிப்படுத்தும் வகையிலான வரைபடத்துடன் பெண்கள் திரண்டு நின்று நன்றி கலந்த வரவேற்பளித்தனர். எந்நாளும் எந்நேரமும் நம் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் வகையில் செம்மொழிப் பூங்கா போன்ற வடிவமைப்பை உருவாக்கி வரவேற்பு தந்தனர். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி - அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதற்கு வழிவகுத்ததைப் போற்றும் வகையில் இத்திட்டத்தால் அர்ச்சகரானவர்கள் கோபுரம் போன்ற வடிவமைப்பின்கீழ் ஒரு குழுவாக நின்று வரவேற்பளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சரான பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ. அவர்களும் மிகச் சிறந்த முறையில் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கி மகிழ்ந்தேன். சில வாரங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது. ஓயாத உழைப்பினால் உடல்நிலையில் ஏற்பட்ட சிறிது பாதிப்பு காரணமாக அப்போது ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி, இப்போது நடைபெற்றது.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

பொதுவாக, அரசு நிகழ்ச்சி என்றாலும் அதற்கான பயண வழியில் வரவேற்பு என்றாலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்வரிடம் அளித்து, “எனக்கு இதைச் செய்து கொடுங்க” என்றுதான் கேட்பார்கள். ஆனால், திருப்பத்தூர் நிகழ்வில் சந்தித்த பொதுமக்கள் பலரும், “உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே, நல்லாயிட்டீங்களா? உடம்பை நல்லா பாத்துக்குங்க. கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை பாருங்க” என்றுதான் அக்கறையுடன் தெரிவித்தனர். உடல்நலன் காக்கும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வேலூர் மாவட்டத்திற்கு வந்தபோது, நத்தம் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரி பிரதீஷ் என்ற பெண்மணி மிகச் சின்ன அளவிலான ஒரு சீட்டைக் கொடுத்தார். அதில் என்ன கோரிக்கை எழுதப்பட்டிருக்கிறது என்று நான் ஆவலுடன் பிரித்தால், “சாமை உணவு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா. காய்ச்சல் வராது” என்று எழுதியிருந்தார். அதைப் படித்தபோதே உடம்புக்குப் புதிய தெம்பு வந்தது போன்ற உணர்வு.

வேலூர் மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி நந்தகுமார் எம்.எல்.ஏ. அவர்களும் மிகச் சிறப்பான முறையில் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் வழியில், மருத்துவச் சேவையில் புகழ் பெற்று விளங்கும் சி.எம்.சி. மருத்துவமனையின் புதிய கட்டடத்தைப் பார்வையிட்டேன். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது வருகை தந்திருந்தார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான புதிய சி.எம்.சி. மருத்துவமனைக் கட்டடத்தை இணைய வழியாக ஏற்கனவே தொடங்கி வைத்திருந்த நான், மருத்துவமனை நிர்வாகத்தின் அன்பான அழைப்பினை ஏற்று நேரிலும் பார்வையிட்டேன். அவர்களின் சேவை உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததைக் கண்டேன்.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

ஜூன்-30 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்றபோது வழியெங்கும் வரவேற்பு. பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், குழந்தைகள் திரண்டு நின்று உற்சாகமாகக் கையசைத்தனர். அதுபோலவே கல்லூரி மாணவர்களும் அன்பை வெளிப்படுத்தி மலர்களைக் கொடுத்து வரவேற்பு தந்தனர். மாணவர்களைப் பார்த்ததும் எனது முகமலர்ச்சி இன்னும் கூடுதலானது.

விழா நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காப்பகப் பள்ளியைப் பற்றி அறிந்து, திடீரென அதனைப் பார்வையிடச் சென்றேன். நீண்ட காலம் சிறார் சீர்திருத்தப் பள்ளியாக இருந்து, தற்போது ஆதரவற்ற மாணவர்களுக்கான காப்பகப் பள்ளியாக அது செயல்பட்டு வருகிறது. அங்கு சென்றபோது, கண்காணிப்பாளர் விடுப்பில் இருப்பதையும், காப்பகப் பொறுப்பாளர் வரவில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவிட்டு, காப்பகப் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்றேன்.

வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியையும் பாடம் பயின்ற மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வகுப்பு நிலவரம், சாப்பாடு சரியாக இருக்கிறதா, என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன என்பதை எல்லாம் அவர்களிடம் கேட்டேன். அந்தக் காப்பகப் பள்ளியை ஆய்வு செய்து முடித்தபிறகு, சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள காப்பகப் பள்ளிகள் அனைத்தையும் மேம்படுத்தும் வகையிலான செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்.

குறிப்பாக, ராணிப்பேட்டை காப்பகப் பள்ளியைச் சுற்றி நிறைய இடவசதி இருந்தும் மாணவர்களுக்கேற்ற வசதிகள் முழுமையான அளவில் இல்லை என்பதை எனது ஆய்வின் அடிப்படையில் சுட்டிக்காட்டினேன். மறுநாளே, அமைச்சர் அவர்கள் அங்கே நேரில் சென்று பார்வையிட்டு, அந்தக் காப்பகப் பள்ளியையும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற காப்பகப் பள்ளிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 342.24 கோடி ரூபாய் மதிப்பிலான 69 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். 68.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 61 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தமாக, 1,18,346 பயனாளிகளுக்கு 731 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.

3 மாவட்ட நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பிய அன்று மாலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாசிச - மதவெறிச் சக்திகளுக்கு எதிரான பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.யஷ்வந்த் சின்ஹா அவர்கள் ஆதரவு திரட்டிட நேரில் வந்திருந்தார். அவருக்கு அறிவாலயத்தில் வரவேற்பளித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து ஆதரவை உறுதிசெய்து, வெற்றிக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

ஜூலை 1-ஆம் நாள் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கோப்புகளைப் பார்த்துவிட்டு, அன்று மாலை திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து கரூருக்குச் சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டேன். 5 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டபோது, கழக முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு நகராட்சி வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் சிறப்பான வரவேற்பினைத் திருச்சி மாவட்ட எல்லை வரையிலும் ஏற்பாடு செய்திருந்தார். திருச்சியின் 3 மாவட்டக் கழகச் செயலாளர்களும் நிர்வாகிகளும் வரவேற்பளித்தனர். பெட்டைவாய்த்தலையைக் கடக்கும்போது கரூர் மாவட்டம் சார்பிலான பிரம்மாண்ட வரவேற்பினை மாண்புமிகு மின்சாரம் - மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்திருந்தார். உற்சாகமாகத் திரண்டிருந்த கழகத்தினர் - பொதுமக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்டு கரூரில் உள்ள அரசு விருந்தினர் விடுதிக்குச் சென்றடையும்போது இரவு 9 மணிக்கு மேலாகிவிட்டது.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

கரூரில் உள்ள தொழிலதிபர்கள், சிறு-குறு தொழில்துறைகளைச் சார்ந்தோர் நேரில் வந்து சந்தித்து, கடந்த ஓராண்டுகால ஆட்சியில் தொழில்துறை முன்னேற்றத்திற்காக நமது கழக அரசு செய்து தந்துள்ள வசதிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மேலும் சில கோரிக்கைகளை வைத்தனர். அதுபோலவே, மறுநாள் (ஜூலை 2) காலையில் விருந்தினர் விடுதிக்கு வருகை தந்த உவழர்களின் பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கையைத் தெரிவித்தனர்.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

விருந்தினர் விடுதியிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் வழியெங்கும் ஊக்கமும் உற்சகாமும் தரும் வகையில் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார் திரு.செந்தில் பாலாஜி. வழியில் கழகத்தின் மூத்த முன்னோடியும், கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில், இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் பெயரிலான விருது பெற்ற பெருமைக்கும் பேரன்புக்கும் உரியவருமான சுப. ராஜகோபாலன் அவர்கள் மக்களோடு மக்களாக நின்று வரவேற்பளித்தார். அவரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி, நலன் விசாரித்தேன். தன்னுடைய நலத்தைத் தெரிவித்து, என் நலத்தில் அக்கறை காட்டி, கழக அரசு அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்து கொண்டபோது நெகிழ்ந்தேன்.

கரூரில் பயனாளிகளுக்கான நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றபோது சற்று ‘மிரண்டு’தான் போனேன். பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது, பயனாளிகள் அமர்ந்துள்ள பகுதிக்கு நடந்து சென்று, முகம் பார்க்கும் வகையில், அவர்களின் அன்பைப் பெறுவது வழக்கம். கரூர் நிகழ்வில் ஒட்டுமொத்தமாகப் பயனாளிகள் மட்டுமே நிறைந்திருந்ததுபோல அவ்வளவு பெரிய எண்ணிக்கை. அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் நடந்து வருவதற்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டன. ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். காலையில் நேர நெருக்கடியால் தவிர்க்கப்பட்ட ‘வாக்கிங்’கை நிகழ்ச்சி வளாகத்தில் நிறைவேற்றச் செய்துவிட்டார் மாவட்ட அமைச்சர்.

கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1,100 கோடி ரூபாய். விருந்தினர் விடுதியில் சந்தித்த தொழிலதிபதிர்கள் - உழவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் சிலவற்றை அறிவிப்புகளாகவும் விழா மேடையிலேயே அறிவித்தேன்.

எழுச்சியான அந்த நிகழ்வை முடித்துவிட்டு, புறப்பட்டு வந்தபோது வழியெங்கும் மக்கள் அலை. பெண்கல்வி போற்றும் கழக அரசின் முத்தான திட்டமான, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டத்திற்குப் பதிவு செய்திருந்த மாணவிகள் வரிசையாகக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி, அவர்கள் நின்ற தூரம்வரை நடந்து சென்று நலன் விசாரித்தேன். படிப்பால் ஒருவர் அடையக்கூடிய முன்னேற்றத்தையும், பெண்கல்விக்கு இந்த அரசு தரும் முக்கியத்துவத்தையும் உணர்த்தினேன்.  மாணவிகள் ஆர்வமாகப் செல்பி எடுத்துக் கொண்டனர். 

நாமக்கல் மாவட்ட எல்லையைத் தொட்டதும் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி அன்பான வரவேற்பை வழங்கினார். அங்கிருந்து சிறிது தொலைவு சென்றதும் நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லைத் தொடங்கிவிட்டது. மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பெரும்படையைத் திரட்டிய இளவரசன்போல கழகத்தினரையும் பொதுமக்களையும் திரளச் செய்து, ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திற்கு எள் விழுந்தால் எண்ணெய்யாகிவிடும் என்கிற அளவிற்கு இடைவெளியே இல்லாமல் மக்கள் கடலில் மிதக்கச் செய்திருந்தார்.

மாவட்டப் பொறுப்பை அவரிடம் வழங்கியபோது சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 தொகுதிகளிலும் கழகக் கூட்டணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 100% வெற்றியை ஈட்டித் தந்தார். அந்த நம்பிக்கையில்தான், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டினை நாமக்கல்லில் நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  அதற்காகச் சென்ற நிலையில்தான், ஒட்டுமொத்த மாவட்டமும் திரண்டதுபோன்ற வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தார். 13 கி.மீ. தொலைவைக் கடப்பதற்கு ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.

சிறப்பான வரவேற்புடன் நாமக்கல்லுக்குச் சென்று, மதிய உணவுக்குப் பின் சிறிது ஓய்வெடுத்த நிலையில், என் மனதில் அருந்ததியின மக்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. குறிப்பாக, கழக அரசு எப்போதுமே விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட அரசு. அதனால், எனது தனிச் செயலாளரிடம், “இங்கே அருந்ததியர் சமுதாயத்து மக்கள் வாழும் இடம் எது?” என்று கேட்டுத் தெரிவிக்கச் சொன்னேன். அவரும் விசாரித்து, சிலுவம்பட்டி என்ற பகுதியில் அருந்ததியர் சமூகத்தவர் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற விவரத்தை, தேநீர் நேரத்தில் என்னிடம் தெரிவித்தார்.

வேறு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி சிலுவம்பட்டிக்குச் சென்றேன். பாதை சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒரு மூதாட்டி எங்களைக் கடந்து சென்றார். பின்னால் வந்த பாதுகாப்புக் காவலர்களிடம், “யாரு அது… ஸ்டாலின் மாதிரி இருக்காரு?” என்று கேட்டார். அதை நானும் கேட்டேன். அந்த மூதாட்டியிடம், “நான் ஸ்டாலின்தாம்மா” என்றேன். அவருக்கு அப்படி ஒரு ஆச்சரியம்.

சிலுவம்பட்டியில் வசிக்கின்ற அருந்ததியர் மக்களுக்கும் அதே ஆச்சரியம்தான். அங்கே ஓர் இளைஞர், “தலைவர் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்ட 3% உள்ஒதுக்கீட்டால் ஹோமியோபதி மருத்துவம் படித்தேன்” என்றார் நன்றியுணர்வுடன். அவர் வீட்டுக்குச் சென்றேன். “டீ சாப்பிடுறீங்களா?” என்று அவரும் அவரது துணைவியாரும் அன்புடன் கேட்டார்கள். அங்கே டீ சாப்பிட்டேன். அந்த இளைஞரின் துணைவியார் எம்.ஏ., பி.எட். படித்திருக்கிறார். அதே தெருவில் ஓர் இளைஞர் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில் எம்.பி..பி.எஸ் படிக்கிறார் என்று அறிந்தேன். கல்லூரியில் படிக்கும் இன்னும் இரண்டு மூன்று மாணவியரும் வந்தனர். எல்லாரும் ஆர்வத்துடன் வந்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினால்தான் இந்த அளவிற்கு உயர்படிப்புகளைப் படிக்கும் தலைமுறையாகியிருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்லும் நிலையில் இருந்தனர்.

அந்தப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை இருப்பதை மக்கள் தெரிவித்தனர். அதனையும் சாலை வசதியையும் உடனடியாக செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். பொதுவாக, அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வுசெய்வது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களின் வழக்கம். அரசு அலுவலகங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பணிகளால் பயன்பெறக்கூடிய மக்களைத் தேடிச் சென்றால், எந்த அளவு பணிகள் நிறைவேறியிருக்கின்றன என்பதைக் காகிதத்தைவிட களம் தெளிவாகக் காட்டிவிடும் என்பதால் மக்கள் வசிக்கும் பணிக்கு அதிக அளவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

அதன்பின், நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடக்கும் பந்தலுக்கு சென்றேன். சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகையை இடம்பெயர்த்து வைத்ததுபோல, வெள்ளை மாளிகையாக ஒளிர்ந்தது மாநாட்டு முகப்பு. உள்ளே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதுவதுபோன்ற சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பந்தலும் இருக்கைகளும் நேர்த்தியான முறையில் இருந்தன. பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடமும், ராஜேஸ்குமாரிடம் ஒரு சில மாற்றங்களை மட்டும் தெரிவித்து அதனை மேற்கொள்ளச் சொன்னேன். கொங்குப் பகுதியின் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை எங்கள் முன் வெளிப்படுத்தினர். அவர்களைப் பாராட்டிவிட்டுப் புறப்பட்டேன்.

ஜூலை-3 காலை 9.30 மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு என நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. 8.30 மணிக்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் வருகைத்தரத் தொடங்கியதால், 9 மணிக்கு பந்தல் நிறைந்திருந்தது. கழக முன்னோடிகள் உள்ளிட்டோர் பங்கேற்புடன் சரியாக 9.30க்கு மாநாடு தொடங்கியது. கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களும் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.யும் மிக நேர்த்தியான முறையில் ஒழுங்கமைத்திருந்தனர்.

மாநாட்டுக் கருத்தரங்கில், ‘இதுதான் திராவிட இயக்கம்’ என்ற தலைப்பில் வரலாற்றுப் பின்னணியோடு திராவிட இயக்கத்தின் தொண்டினை விளக்கினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். ‘பெண்களின் கையில் அதிகாரம்’ என்ற தலைப்பில் மிகவும் எதார்த்தமான எடுத்துக்காட்டுகளுடன் அருமையாக உரையாற்றினார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா. ‘திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம்’ என்ற தலைப்பில் கழக அரசின் சாதனைகளைப் ‘பவர்பாய்ண்ட்’ வாயிலான புள்ளிவிவரங்களுடன் சிறப்பாக எடுத்துரைத்தார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள். ‘தி.மு.க உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ என்ற தலைப்பில் 50 ஆண்டு காலத்தில் இந்தியாவுக்கே முன்னோடியாகக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக உரையாற்றினார் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் வலிமையையும் அந்த வலிமைமிகு அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதே கூட்டாட்சித் தத்துவம் என்பதையும் ஆற்றல்மிகு பேச்சால் எடுத்துரைத்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.

மதிய உணவு இடைவேளை நேரத்தையும்கூட வீணடிக்காமல், வயிற்றுக்கான உணவுடன், கருத்துச் செறிவான காணொலிகளும் திரையிடப்பட்டன. கழக அரசின் ஓராண்டு காலச் சாதனைகள் குறித்து கலைஞர் தொலைக்காட்சியினர் உருவாக்கியிருந்த விரிவான காணொலி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

காலை அமர்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து அமர்ந்திருந்தனர். 50 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் அதிகமாக உள்ளாட்சிப் பொறுப்புகளில் பெண்கள் இருப்பதால் அவர்களின் வலிமையைக் காட்டும் வகையில், பெண் பிரதிநிதிகளை ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அமர ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் வேலுவிடம் கேட்டிருந்தேன். மதிய அமர்வில், அதுபோலவே பெண் பிரநிதிகள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

நான் மதிய உணவு முடித்தவுடன், அதற்கு முந்தைய நாள் மாலை, நான் சந்தித்த அருந்ததியின மக்களின் தேவைகளான சாலைப் பணிக்கான ஆணை, குடிநீர்த் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆணை, ஹோமியோபதி மருத்துவம் படித்த இளைஞருக்கான பணி ஆணை என எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி அதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் உடனிருக்க அந்த மக்களிடமே தந்தபோது, அந்த மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை வராமல், கண்களின் கண்ணீராலும், புன்னகையாலும் நன்றி தெரிவித்தனர்.

2.30 மணிக்குத் தொடங்கிய மதிய அமர்வில் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, ‘மக்களோடு நில் - மக்களோடு வாழ்’ என்ற தலைப்பில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னையின் முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக உரையாற்றினார். மாநகராட்சி -நகராட்சி - பேரூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்களிடம் பழகி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றித் தருவது தொடர்பாக ஒரு வழிகாட்டு நெறிமுறை கையேடு வழங்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி மா.சு. அவர்கள் விரிவாகவும் அனுபவ அறிவுடனும் எடுத்துரைத்தார்.

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் உரையாற்றும்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நகர்ப்புறத்தில் வாழ்கிற மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளைப் பாழடித்தவர்கள் இப்போது கழகத்தின் சார்பில் பொறுப்புக்கு வந்துள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் குறைகாணும் முயற்சியில் இருப்பதையும், அதையெல்லாம் தகர்த்தெறிந்து, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். லால்குடி - புள்ளம்பாடியிலே உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பில் இருந்து, தற்போது அந்தத் துறைக்கே அமைச்சராக இருப்பதால் அவருடைய பட்டறிவின் வீச்சினைப் பேச்சினில் உணர முடிந்தது.

கழகப் பொதுச் செயலாளர் - நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் உள்ளாட்சி அமைப்பில் தனக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும், நல்லாட்சி வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடனும், அதனைத் தொடர்கின்ற உங்களில் ஒருவனான என் தலைமையிலான ஆட்சியிலும் பொறுப்பு வகித்து, தமிழ்நாட்டின் நீள - அகலத்தையும், நிர்வாகத்தின் ஆழத்தையும் முழுமையாக அறிந்தவர் என்பதால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மக்கள் நலன் காக்கும் சேவகர்களாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சுருக்கமாகவும் மனதில் பதியும்வகையிலும் எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து விழாத் தலைமையுரையாற்றிய உங்களில் ஒருவனான நான்,  சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமைமிகு அனுபவத்தையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் கிடைத்த நிர்வாகத் திறனையும் உணர்ந்து, தற்போது பொறுப்புக்கு வந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குறிப்பாக பெண் பிரதிநிதிகள் எத்தனை நெருக்கடிகளுக்குப் பிறகு இந்த இடத்தை அடைந்துள்ளார்களோ, அதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைத்து, மக்களாட்சியின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்பில் உள்ள பிரதிநிதிகளின் ஒரு கையெழுத்து எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதையும் விளக்கினேன்.


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

ஆட்சிப் பொறுப்பு தங்கத் தாம்பாளத்தில் வைத்து நமக்கு வழங்கப்படவில்லை. கடுமையான உழைப்பின் விளைவு இது. மக்களின் நம்பிக்கைக்குரிய வகையிலே ஆட்சியின் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களாக வெளிப்பட்டு வருகிறது. ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்ற கண்டிப்பையும் நாமக்கல் மாநாட்டில் வெளிப்படுத்தினேன். உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளான கழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன். திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதன் சமூகநீதிக் கொள்கையையும் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளவர்களன்றோ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்!

கழக அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன். பணிகள் காத்திருந்தன. வா..வா.. என என்னை அழைப்பது போலவே தோன்றியது.

அடுத்த நாள், ஜூலை-4 அன்று முதலீட்டாளர்கள் மாநாடு. தொழில்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தங்கமான அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் முன்னெடுப்பில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பான முறையில் கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியும் முதலீட்டை ஈர்க்கும் திறனும் இந்திய அளவில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. கொரோனா பேரிடர், பொருளாதார மந்தநிலை, 10 ஆண்டுகளாக முந்தைய ஆட்சியாளர்களின் வெற்று விளம்பரம் இவற்றைக் கடந்து உண்மையான - முழுமையான முதலீட்டையும், அதற்கேற்ற தொழில்களையும், அவை சார்ந்த வேலைவாய்ப்புகளையும் கழக ஆட்சியில் தமிழ்நாடு கண்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இந்திய மாநிலங்களில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது நமது தமிழ்நாடு!


MK Stalin: ’தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடம்பரக் கூத்துகளை அரங்கேற்றிய முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், மாநாட்டுக்கு அத்தியாவசியமான - நேர்த்தியான ஏற்பாடுகளுடன் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 முதலீட்டாளர் மாநாடுகளின் வாயிலாக 2 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.

ஒவ்வொரு முதலீட்டாளர் மாநாட்டிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, முழுமை பெற்ற தொழில் நிறுவனங்களைத் தொடங்கி வைத்து, வேலைவாய்ப்புகளை அளிப்பது என்கிற அளவில், முதலீட்டாளர்களுக்கான தொழில் கட்டமைப்புகளை உருவாக்கித் தரும் நண்பனாக மக்கள் நலன் காக்கும் நமது அரசு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போர் விமர்சனங்களைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டியது நமது கடமை.

நாமக்கல் மாநாட்டில் நான் சொன்னதுபோல, ‘தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’ என்பதற்கேற்ப - கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்!

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
Embed widget