Sanjay Raut On Udhayanidhi: ”மு.க.ஸ்டாலினை நாடே உற்று பார்க்கிறது, உதயநிதி?” - சனாதன விவகாரத்தில் சிவசேனா எம்.பி. கருத்து..!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஒட்டுமொத்த நாடே உற்று பார்ப்பதாக, சிவசேனா கட்சி (உத்தவ் தாக்ரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சனாதனம் தொடர்பான உதயநிதியின் கருத்தை ஏற்க முடியாது என, சிவசேனா கட்சி (உத்தவ் தாக்ரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சனாதன விவகாரம்:
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிராக உள்ள சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதன் மூலம், இந்துக்கள் மீதான இனப்படுகொலைக்கு அவர் அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பலரும் உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடயே, உத்தரபிரதேசத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத் கருத்து:
இந்நிலையில் தான் இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா (உத்தவ் தாக்ரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத், உதயநிதி பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். அவரது அந்த பேச்சை நான் கேள்விப்பட்டேன். யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது திமுகவின் பார்வையாகவோ அல்லது அவரது தனிப்பட்ட கருத்தாகவோ இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். மற்ற மதத்தினரும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது.
நாட்டின் நிலைமை மோசமடையக் கூடாது. இந்தியா கூட்டணி மீது பாஜக தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது. மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் ஒரு போரில் இணைந்து இருக்கிறார். எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்துக்களின் வாக்கு வங்கி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கு எதிராக பேசி இருப்பதை போன்று, பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இதனால், எதிர்வரும் தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்கும் சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே, உதயநிதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். காங்கிரசும் எல்லா மதங்களையும் சமமாக மதிப்பதாக கூறியதே தவிர, உதயநிதி கருத்தை ஆதரிப்பதாக கூறவில்லை. இந்நிலையில் தான், உதயநிதியின் கருத்தை ஏற்க முடியாது என இந்தியா கூட்டணியில் உள்ள சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.