எழும்பூர், கொரோனா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முதல்வர் ஆய்வு..!
சென்னை, எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த சூழலில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நிச்சயம் தாக்கக்கூடும் என்றும், அதன் தாக்கம் இதைவிட மோசமாக இருக்கும் என்றும், அதிகளவில் குழந்தைகளை பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதாதரத்துறையினர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். எனினும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள், மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்பதற்கான நிரூபண ஆய்வுகள் இல்லை என்கிறார்கள்.
டெல்லி எயம்ஸ் மருத்துவமனை தலைவர் நேற்று அளித்த பேட்டியில், கொரோனா வைரசின் மூன்றாவது அலை அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குள் தாக்கக்கூடும் என்றும், இந்த பாதிப்பு தவிர்க்க முடியாதது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்பில் இருந்து பொதுமக்களையும், குழந்தைகளையும் தற்காத்துக் கொள்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பிரத்யேக பூஜ்ஜிய தாமத மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 250 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்கள் உள்பட சுகாதாரத்துறை நிபுணர்களிடம் கேட்டறிந்தார். இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரவையும் முதல்வர் பார்வையிட்டார். இந்த பிரிவுகளில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவக் கருவிகளும், ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, முதல்வர் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளாட்சி அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார். இந்த மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள 3 கோடியே 10 லட்சம் மின் இணைப்புதாரர்களின் மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற/இறக்கம், உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், மின்தடை குறித்த தகவல்கள், குறைந்த மற்றும் உயர்ந்த மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள்/ புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
24 மணிநேரமும் செயல்படும் விதம் தொடங்கப்பட்டுள்ள இந்த மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தில் மூன்று ஷிப்டுகளிலும் சேர்த்து 195 நபர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.