புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 – முதல்வர் அறிவிப்பு
MK Stalin Announcement : கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மே மாதமே முதல் தவணை நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பால் அரசுக்கு மேலும் ரூ.42 கோடி செலவீனம் அதிகரிக்கும்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த திருநாள் முதல் ரூ.4000/-வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்திருந்தார்கள்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்” என கூறப்பட்டுள்ளது.