நான் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவனா? – அண்ணாமலைக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த சேகர்பாபு
ரவுடி சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றவர் என அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

ரவுடி சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றவர் என அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சியில், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழியினைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சேகர் பாபு, “குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மனதில் வைத்து சொல்லியிருப்பார் என நினைக்கின்றேன்.
அதேபோல், படிக்காதவர்கள் கல்வியைப் பற்றி எப்படி பேசலாம் என கேட்கிறார். இது காமராஜரை அவர் கலங்கப்படுத்துவது போல் இருக்கிறது.
படிப்பிற்கும் மனதிற்கும் சேவைக்கும் சம்பந்தம் இல்லை. மனிதாபிமானத்தை கொண்டிருப்பவர்கள் யார் உயர் பதவிக்கு வந்தாலும் மக்கள் சேவையை தலையாய கடமையாக வைத்து செயல்படுவார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது” எனத் தெரிவித்தார்.
சேகர் பாபு ரவுடி சரித்திர பதிவேட்டில் இடம்பிடித்தவர் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அண்ணாமலை என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சேகர் பாபு, “அண்ணாமலை டூப் போலீஸ், லஞ்சம் வாங்கிய பேர்வழி. இப்படி நானும் குற்றச்சாட்டை முன் வைக்கிறேன். ஆதாரம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டை முன்வைக்கலாம்.
வாய் புளித்ததா மாங்காய் புளித்ததா என பேசக்கூடாது. அவர் பேசுவதை பத்திரிகையாளர்கள் பேசக்கூடாது. அவர் ஏதேனும் ஆதாரத்தை காட்டியிருந்தால் நீங்கள் கேட்பது நியாயம். போகிற போக்கில் தூற்றிவிட்டு செல்லக்கூடாது. ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.




















