TN Ministry for Railways: ‘தமிழ்நாட்டுக்கென தனி ரயில்வேத் துறை?’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதுத் திட்டம்..!
’நான் நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதில் பெருமை இல்லை, தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வேண்டும் அது தான் எனக்கு பெருமை என்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கான தனது திட்டங்களை தொடங்கியிருக்கிறார்’
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமாக இருக்கும் ரயில்வேத் துறை என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், மாநிலத்தில் தொடர்வண்டி நிலையம் தேவைப்படும் இடத்தில் புதிய தடம் அமைக்க வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, மாதக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கென தனியாக ரயில்வேத் துறையை தொடங்குவது குறித்து முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டதுபோல, மாநிலத்திற்கென தனியாக ரயில்வே அமைச்சகத்தை அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுசெய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்திற்குள் ரயில் நிலையம் தேவைப்படும் இடங்களுக்கு ரயில் பாதை அமைக்கவும், ரயில் நிலையங்கள் தொடங்கவும், இனி மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், மாநில அரசே ரயில்வே பணிகளை மேற்கொள்ளும் வகையில், தனியாக ரயில்வே துறையை ஏற்படுத்தும் இந்த திட்டம், தமிழக வளர்ச்சிக்கும் தொழில் புரட்சிக்கும் வித்திடும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.
’நான் நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதில் எனக்கு பெருமையில்லை, தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக ஆகவேண்டும் அதுதான் எனக்கு பெருமை’ என சமீபத்தில் பாப்பப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை மெய்ப்பிக்கும் வகையில் இதுபோன்ற புரட்சிகர திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறார்.
மாநிலத்திற்கென ரயில்வே அமைச்சகத்தை தனியாக தொடங்குவது என்பது இன்னும் முடிவெடுக்கப்படாத நிலையில், அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதேபோல், மாநிலத்தில் நிதி நிலமை சரியில்லாத நிலையில், மாநில அரசின் நிதியை மட்டுமே நம்பி, தனியாக ரயில்வே துறையை தொடங்காமல், தனியார் பங்களிப்புடன் தொடங்கலாம் என ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கென தனியாக ரயில்வே துறை தொடங்கப்பட்டால், அது இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக விளக்கும், பல்லாயிரம் பேருக்கு இந்த திட்டம் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரமுடியும் என்பதாலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த துறையை தொடங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.