Minister Sivasankar: தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயருகிறதா.? அமைச்சர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கோங்க
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் என்ன சொன்னார்.? பார்க்கலாம்.

தமிழகத்தில், பேருந்து கட்டணம் உயர்வதாக அவ்வப்போது செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பேருந்து கட்டணம் உண்மையிலேயே உயர்த்தப்படுகிறதா என்பது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். அவர் என்ன சொன்னார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
பஸ் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் கூறியது என்ன.?
அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம், பேருந்து கட்டண உயர்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் வதந்தியை தாங்கள் மறுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், பேருந்து கட்டண உயர்வு குறித்து தற்போது எந்தவித திட்டமும் இல்லை என உறுதிபடக் கூறினார்.
இப்போதும் அதையே உறுதிப்படுத்துவதாக தெரிவித்த அமைச்சர், சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டலின் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
பேருந்து கட்டணத்தை உயர்துவதற்கான சூழல் ஏற்பட்ட போதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல், அரசே ஏற்ற நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
அதனால், பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது என்றும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதிமுக குறித்து விமர்சனம்
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அதிமுகவை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தை நிரப்புவதே பாஜக-வின் கனவு என விமர்சித்தார். திமுக-வின் வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில், ஒவ்வொரு முறையும் பல்வேறு புதிய கட்சிகளை தேர்தல் நேரத்தில் களமிறக்குவது பாஜக-வின் பழக்கம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
தற்போதும் அந்த தந்திரத்தை புதுப்புது வடிவங்களில் பாஜக எடுத்துள்ளதாகவும், அனைத்தையும் முறியடித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பேசுவது ஒன்றாகவும், நடைமுறை என்று வரும்போது வேறு ஒன்றாகவும் இருக்கும் என விமர்சித்த அவர், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அமித் ஷா அமர்ந்திருந்த மேடையிலேயே அமர்ந்து, கை கட்டி, வாய் மூடி மவுனியாக அமர்ந்திருந்தார் என கடுமையாக சாடினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி இப்போது ஒன்றை பேசுவதாகவும், இன்னும் சில காலம் கடந்தால் என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.





















