’கரூர் மாவட்ட அதிமுகவிற்கு ஸ்கெட்ச்’ உள்ளாட்சி பதவிகளை குறிவைத்த திமுக..!
திமுகவின் பார்வை ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி மீது திரும்பியது. கடவூர் ஒன்றிய தலைவர் மற்றும் சில கவுன்சிலர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியதால் அந்த ஒன்றியம் திமுக வசமானது.
கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய 8 ஒன்றியங்களுக்கு அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதிமுக கவுன்சிலர்கள் அதிகமாக வெற்றி பெற்றனர். 8 ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து எனும் 9 தலைவர்கள், 9 துணை தலைவர்கள், பதவிகளை அதிமுக கைப்பற்றியது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கரூர் மாவட்டத்தில் நகராட்சிகள், மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இதற்கு பிறகு தான் திமுகவின் பார்வை ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி மீது திரும்பியது. கடவூர் ஒன்றிய தலைவர் மற்றும் சில கவுன்சிலர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியதால் அந்த ஒன்றியம் திமுக வசமானது. அடுத்து தாந்தோணி ஒன்றியத்திலும் தலைவர் உட்பட சிலர் திமுகவில் ஐக்கியமாக தாந்தோணியும் திமுக வசமானது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அதிமுகவில் இருந்த 11 பேரில் 7 பேர் திமுகவுக்கு தாவினர். ஏற்கனவே 7 கவுன்சிலர்கள் இருந்த நிலையில் இவர்களையும் சேர்த்து திமுகவின் பலம் 14 ஆனது. தலைவர், துணைத்தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் உட்பட 3 பேர் அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமாக, அந்த ஒன்றியமும் திமுக வசமானது. குளித்தலை ஒன்றியத்தில் அதிமுக 6, திமுக 4 கவுன்சிலர்களை கொண்டிருந்தது. அதிமுகவை சேர்ந்தவர்களே தலைவர், துணைத் தலைவர் பதவியில் இருந்தனர். சில நாட்களுக்கு முன் அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் திமுகவில் இணைய திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது. இதனால், இந்த ஒன்றியமும் அதிமுகவிடம் இருந்து எந்த நேரத்திலும் திமுக கைக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த ஒன்றிய தலைவர் விஜய விநாயகம் கரூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இப்போது அவரின் உள்ளாட்சித் தலைவர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 5 ஒன்றியங்களை தன் வசம் கொண்டு வந்த திமுக அடுத்ததாக கரூர், க.பரமத்தி, தோகைமலை ஆகிய 3 ஒன்றியங்களிலும் வலை விரித்து காத்திருக்கிறது. "மற்ற ஒன்றியங்களைப் போல எங்களை விலைக்கு வாங்க முடியாது. அதனால் திமுகவின் ஆசை நிறைவேறாது" என்று அதிமுகவினர் அடித்து சொல்கின்றனர்.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி அதிமுகவிடம் உள்ளது. துணை தலைவர் பதவி காலியாக இருக்கிறது. திமுகவும், அதிமுகவும் தலா 6 கவுன்சிலர்களுடன் சம பலத்தில் உள்ளதால் துணைத்தலைவர் பதவியை பிடிக்க முடியாமல் திமுகவினர் தவிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் திமுகவினரே இருக்க வேண்டும் என்ற ஆசையில் அதிமுகவினருக்கு "ஸ்கெட்ச்" போட்டு காய் நகர்த்தி கொண்டுள்ளனர். அடுத்த கட்டமாக இதே பார்முலா தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.