கோயில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது சோளிங்கர் நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தில் மலையடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள சாமியை தரிசனம் செய்வதற்கு வசதியாக ரோப்கார் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சோளிங்கர் நகரில் லட்சுமி நரசிம்மர் கோயில் உற்சவ மூர்த்திக்காக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர். ரோப் கார் பணிகள் நடைபெற்றுவரும் மலையடிவாரப் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நிச்சயம் கொண்டுவரப்படும். தமிழ்நாட்டில் குடமுழுக்க விழா பணிகள் நடைபெற உள்ள பெரிய மற்றும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு, குடமுழுக்கு விழா நடைபெற உள்ள கோயில்களின் பட்டியலை முதல்வர் வெளியிடுவார்.
தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதையில் செல்ல முடியாத பக்தர்களை டோலி மூலம் சுமந்து செல்லும் தொழிலாளர்களுக்கு ரோப்கார் திட்டம் முடிந்த பிறகு அவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, ரோப் கார் பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு, பதிலளித்த அதிகாரிகள் ”கேபிள் இணைப்பு பணிகள் முடிந்த நிலையில், பெட்டிகளை பொருத்தி பாதுகாப்பு சோதனைகள் மட்டும் நடத்தவேண்டும். இதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்றனர். இதையடுத்து, ரோப் கார் பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். முடிந்தால் நானே அவ்வப்போது நேரில் வந்து ஆய்வுசெய்கிறேன்” என்றார்.
கடந்த சில தினங்களாக இந்து அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு ஆய்வுப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த அவர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை 100 நாட்களுக்குள் செயல்படுத்துவோம் என்றும், தமிழில் அர்ச்சனை செய்வது செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, நாளை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு, மாவட்டந்தோறும் கோயில்களை கண்காணிக்க குழுக்கள் மற்றும் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.