Minister Ragupathi:ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீசியதற்கு தி.மு.க. பொறுப்பல்ல - அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மீதும் தமிழ்நாடு மக்கள் மீதும் வெறுப்புணர்வை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்க கூடிய முதல் நபர் ஆளுநர் தான் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
என்.ஐ.ஏ.வுக்கு மாற்றமா?
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கை போல வேறு யாரும் நடவடிக்கைகளை எடுத்து வருவதில்லை. ஆளுநர் மாளிகைக்கு முன்னால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. அதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் எந்த சட்ட ஒழுங்கும் கெட்டுவிடவில்லை. அந்த தனி நபரை பற்றி விசாரித்து வருகின்றோம் அவருக்கு எந்தவிதமான பின்புறமும் இருப்பதாக இதுவரை தகவல் இல்லை. இந்த வழக்கை என்ஐஏவு -க்கு மாற்ற வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தான் முடிவெடுக்க முடியும்.
ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்:
கோட்டாட்சியர் 110 விசாரணையின் அடிப்படையில் எங்களுக்கு கிடைத்த தகவல் படி பெட்ரோல் குண்டு வீசிய நபர் 8 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்துள்ளார். அதை தவிர வேறு எதுவும் கிடையாது. அவருடன் யாரும் நெருங்கி பழகியதாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சிறையில் இதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை, ஏற்கனவே பாஜக அலுவலகத்தில் இதேபோல் பெட்ரோல் குண்டை அவர் வீசியுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் இருக்கின்றது. எந்த அடிப்படையில் அவர் பெட்ரோல் குண்டை வீசினார் என்பது விசாரணையில் தான் தெரிய வரும். நிச்சயமாக இது முழுக்க முழுக்க கண்டிக்கத்தக்க ஒன்று நாங்கள் இந்த மாதிரியான அசம்பாவிதங்களை தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
நாங்கள் பொறுப்பாக முடியுமா?
எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தான் கெட்ட பெயர். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்பதற்காக வேறு யாரோ செய்திருக்கக்கூடிய சதி செயலாக தான் இது இருக்க வேண்டும். எந்த அடிப்படையில் ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது என்பது தெரியவில்லை, நாங்கள் குற்றவாளியை கைது செய்து விட்டோம் என்பது வெளிப்படையாக அனைத்து பத்திரிகை ஊடங்களிலும் வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளது உண்மை. தமிழ்நாடு அரசு மீதும் தமிழ்நாடு மக்கள் மீதும் வெறுப்புணர்வை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்க கூடிய முதல் நபர் இன்று ஆளுநர் தான். நாங்கள் வெறுப்புணர்வை ஆளுநர் மீது எப்போதும் பரப்பவில்லை. ஊர் ஊருக்கு போய் ஆளுநர் ஒரு கட்சியின் தலைவர் போலவும் எதிர்க்கட்சியை போலவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாங்கள் ஆட்சி செய்கின்ற இந்த மாநிலத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றெல்லாம் கூறுவார்கள். இந்த பிரச்சனைக்கு திமுகவோ அதன் தோழமைக் கட்சிகளோ பொறுப்பில்லை. இது ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை தடுத்துள்ளோம் உடனடியாக குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவர் மீது விசாரணை நடைபெற்ற வருகிறது குற்றவாளியை சட்டத்தின் முன்பு கொண்டு போய் நிறுத்துவோம் நாங்கள் எந்தவிதமான தவறும் செய்யாதவர்கள். எங்கேயாவது மன ரீதியாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா? “ என பேசியுள்ளார்.