PTR Palanivel Thiagarajan : நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி.. உறுதுணையாக இருப்பவர் சபரீசன்.. புகழ்ந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்..!
அமைச்சர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி குறித்தும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்தும் பேச்சுகள் இடம்பெற்றிருந்தது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி. பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
பி.டி.ஆர் ஆடியோ லீக்:
அந்த ஆடியோவில், “நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் “ஒரு நபர் ஒரு பதவி” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். முதலமைச்சரின் மகனும், மருமகனும் தான் கட்சியே” என்கிற ரீதியிலான பேச்சு இடம் பெற்றது. கடந்த சில நாள்களாக ஆடியோ லீக் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி வந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி குறித்தும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்தும் பேச்சுகள் இடம்பெற்றிருந்தது. தற்போது, அளிக்கப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், உதயநிதி, சபரீசன் ஆகியோரை புகழும் வண்ணம் பி.டி.ஆர் பேசியுள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி:
உதயநிதியை நம்பிக்கை நட்சத்திரம் என குறிப்பிட்டுள்ள பி.டி.ஆர், "தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி முதலமைச்சர் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார்.
எங்களது நம்பிக்கை நட்சத்திரமான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.
அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
வழிகாட்டியாக இருப்பவர் சபரீசன்:
தனக்கு வழிகாட்டியாக இருப்பவர் சபரீசன் என குறிப்பிட்டு பேசிய பி.டி.ஆர், "நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்? நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன்.
எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.