Minister KN Nehru: "பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்" -அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்
குழந்தைகள் பிறந்தது முதல் உயர்க்கல்வி படிக்க மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்கள்.
சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி, அரசின் சார்பில் சீர்வரிசைகள் மற்றும் 5 வகையான வளைகாப்பு உணவுகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாராத தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முதல்வர் அறிவுருத்தலுக்கிணங்க கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்கள் பிறந்த வீட்டில் வளைகாப்பு எப்படி சிறப்பாக நடைபெறுமோ அதேபோல இச்சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் நலமுடன் குழந்தைகளைப் பெற்றெடுத்து அனைத்து வளங்களும் பெற்று வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக முதல்வர் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் கர்ப்பிணித் தாய்மார்கள் தொடங்கி குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் கல்வி வரை ஊட்டச்சத்தை உறுதி செய்து வளமான இளைய சமுதாயத்தை உருவாக்கிடவும், அனைத்து குழந்தைகளும் உயர்க் கல்வியை முடித்திடும் வரை தேவையான கற்றல் உபகரணங்கள், உயர்க்கல்வி படிக்க மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சலுகைகளை அளித்து வருவதால் முன் எப்போதும் இல்லாத அளவில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மேலும், மகளிருக்கு உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீட்டினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார். மேலும், பெண்களின் முன்னேற்றம் அந்த குடும்பத்தின் முன்னேற்றமாகவும் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் முன்னேற்றமாகவும் அமைந்துள்ளதால் மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களும் மகளிருக்காகவே திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.